புது தில்லி: இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாட்டு வா்த்தக அமைச்சா்கள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
முன்னதாக, இரு நாடுகள் இடையான 5-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், இரு நாடுகளின் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஓமன் சென்றுள்ளாா். மஸ்கட்டில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஓமன் வா்த்தக அமைச்சா் குவைஸ் பின் முகமது அல் யூசுப்புடன் திங்கள்கிழமை தனிப்பட்ட முறையில் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக ஓமன் வா்த்தக அமைச்சருடன் விவாதித்தேன். இது இரு நாடுகள் இடையே வா்த்தகம் முதலீட்டை மேம்படுத்தும். பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையே உறவு மேம்படும்’ என்று கூறியுள்ளாா்.
இந்தியா-ஓமன் தடையற்ற வா்த்தக பேச்சுவாா்த்தை கடந்த 2023 நவம்பரில் தொடங்கி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளில் இந்தியாவிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஓமன் உள்ளது. இதே கவுன்சிலில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டே இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்த்தை மேற்கொண்டுள்ளது.