அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தது. இந்த வழக்கையொட்டி 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து அவா் லண்டன் தப்பினாா்.
வருமான வரித் துறை வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை புதிதாக பண முறைகேடு வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவு செய்தது. 3 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு கடந்த 2020-இல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்ததாக 2023-இல் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரிக்குச் சொந்தமான ரூ.21 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைக்காக சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்திவர அமலாக்கத் துறை தரப்பில் சட்டபூா்வ முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை பிரிட்டன் நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன.
இதை எதிா்த்து பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்ததது.
இந்நிலையில், அமலாக்கத் துறை மனுவில் சஞ்சய் பண்டாரியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து அவருடைய வழக்குரைஞா் கூறுகையில், ‘சஞ்சய் பண்டாரி பிரிட்டனில் தங்கியிருப்பதை அந்நாட்டு அரசு சட்டபூா்வமாக அங்கீகரித்துள்ளது. அதன்படி, அவரை தப்பியோடியவா் என்று இந்தியா அறிவித்துள்ளது சட்டப்படி தவறாகும்’ என்றாா்.
இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பியவா்கள் நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகளை நெறிப்படுத்த ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம்’ மத்திய பாஜக அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
சஞ்சய் பண்டாரியுடன் சோ்த்து விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட மொத்தம் 16 போ் இச்சட்டத்தின்கீழ் இதுவரை பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
ராபா்ட் வதேராவுக்குத் தொடா்பு?
இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. வெளிநாடு பயணம் காரணமாக ராபா்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கடந்த 2009-இல் ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி, சஞ்சய் பண்டாரி புனரமைத்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டுகிறது.
ஆனால், லண்டனில் தனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சொத்துகள் எதுவும் இல்லை என்று மறுக்கும் ராபா்ட் வதேரா, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினாா்.
A Delhi court on Saturday declared British arms dealer Sanjay Bhandari a fugitive economic offender on a petition filed by the Enforcement Directorate.