மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறையின் கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கோளாறு போன்றவை, மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், பணியில் சேர்ந்து, ஆனால், ஒரு நாள் கூட வேலைக்கு வராத காவலர் ஒருவருக்கு 12 ஆண்டுகளாக தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக ரூ.28 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தக் காவலர் 2011ஆம் ஆண்டு போபால் காவல்துறை பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பிறகு, அவர் சாகர் காவல்துறை பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சென்று சேராமல், நேராக விதிஷாவில் உள்ள வீட்டுக்கு வந்துவிட்டார்.
தனது உயர் அதிகாரிகள் யாரிடமும் விடுப்பு கேட்காமல், தன்னுடைய பணி ஆவணங்களை விரைவுஅஞ்சல் மூலம் போபால் காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு அந்த ஆவணத்தை எந்த விசாரணையும் இன்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
பயிற்சி மையத்திலும் இவர் வரவில்லை என்று யாரும் புகார் அளிக்கவில்லை, போபால் காவல்துறையினரும் இது பற்றி கேள்வி எழுப்பவில்லை.
சில மாதங்கள் கடந்தன. அந்த தலைமைக் காவலர் பணிக்குத் திரும்பவில்லை. அது ஆண்டுகள் ஆகின. அவரது பெயர் காவலர் பட்டியலில் இருந்தது. மாதந்தோறும் அவருக்கு சம்பளம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தலைமைக் காவலரும் சப்தமே இல்லாமல் மாத ஊதியத்தை செலவி செய்திருக்கிறார்.
காவல்நிலைய வாசலுக்கே செல்லாமல், இதுவரை அவர் ரூ.28 லட்சம் வரை ஊதியமாக பெற்றுள்ளார்.
இது எப்போது வெளிச்சத்துக்கு வந்தது என்றால், 2023ஆம் ஆண்டு காவலர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்தபோதுதான். இந்த தலைமைக் காவலர் பெயரை ஆலோசித்தபோது, அப்படியொருவரை யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவரது பணி வரலாறு குறித்து ஆராய்ந்தபோது, அப்படி ஒன்று இருந்திருக்கவேயில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
அப்போதுதான், ஒரு நாள் கூட காவலராக பணியில் சேராத ஒருவருக்கு கடந்த 12 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டு வந்ததே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த தலைமைக் காவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் தான் மனநலன் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக பதிலளித்துள்ளார். அதற்குரிய ஆவணங்களையும் அளித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.