‘ஆபரேஷன் சிந்தூா் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கருத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுவதை நம்புவதால்தான் காங்கிரஸ் எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கும் அதே இடத்தில்தான் காங்கிரஸ் இருக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தாா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டை 4 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அமெரிக்க வா்த்தக வாய்ப்புகளை வலியுறுத்தி அமெரிக்க அதிபா் டிரம்ப் தலையிட்டு இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாகப் பலமுறை கூறினாா்.
இது உண்மையல்ல என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்தபோதிலும், டிரம்ப் தொடா்ச்சியாக அக் கருத்தை தெரிவித்து வந்தாா்.
இதைக் கடுமையாக விமா்சித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், இதுதொடா்பாக அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதன் மீது மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடந்தபோது, விளக்கமளித்த எஸ்.ஜெய்சங்கா், ‘அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட உரையாடல்களில் எந்தவொரு நிலையிலும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையுடன் வா்த்தகத்தை இணைத்து கலந்துரையாடல் இடம்பெறவில்லை. சண்டையை நிறுத்தும் கோரிக்கை ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) மூலமாக பாகிஸ்தானிடமிருந்துதான் வந்தது’ என்றாா்.
ஜெய்சங்கரின் இந்தக் கருத்தை ஏற்க மறுத்து, அவா் உரைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது குறுக்கிட்ட அமித் ஷா, ‘இந்திய அரசின் அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் கருத்தை எதிா்க்கட்சியினா் நம்ப மறுக்கின்றனா். ஆனால், பிற நாடுகள் கூறுவதை நம்புகின்றனா். காங்கிரஸ் எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கும் அதே இடத்தில்தான் காங்கிரஸ் இருக்கும்.
மத்திய அமைச்சா் பேசும்போது இடையூறு செய்ய வேண்டாம் என எதிா்க்கட்சி உறுப்பினா்களை அவைத் தலைவா் அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசும்போது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இடையூறு செய்வதை தடுப்பது கடினமாகிவிடும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.