வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். சாட்டனில் இருந்து ஹெலிகாப்டர்கள் பாக்யோங் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றன. இதையடுத்து மீட்பு நடவடிக்கை இன்று முடிவடைந்தது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
வடக்கு சிக்கிமில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதிகளில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக, 1,600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் நகரங்களில் பல நாள்களாக சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் மாநில அரசின் முயற்சியால் மீட்கப்பட்டனர்.
இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட படையினர் பல நாள்களாக மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 140க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் வெளியேற்ற பல ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜூன் 1 ஆம் தேதி மாலை சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயினர்.
காணாமல் போன வீரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.