கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மூடப்பட்ட கோலார் தங்க வயலை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சுரங்கத்தின் அடி ஆழத்தில் தோண்டி தங்கம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக, தரைப்பகுதியில் மேலே இருக்கும் தங்கத்தை சேகரிப்பது புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கலந்திருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
இதையும் படிக்க.. ஜூலை 5ஆம் தேதி காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்கா கணிப்பு
இதனால் தங்கம் விலை குறையுமா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவின் தங்க இறக்குமதி குறைந்து, அந்நியச்செலாவணி குறையலாம் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றுதான் கூறப்படுகிறது.
கடந்த 1875ஆம் ஆண்டில் கோலார் தங்க வயலில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இது படிப்படியாக அதிகரித்து 1902ஆம் ஆண்டில் கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் உருவானது. உலகிலேயே தங்க உற்பத்தியில் 6வது இடத்தை பிடித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956ஆம் ஆண்டு இந்த தங்கச் சுரங்கமும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
ஆனால், 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக தங்கம் கிடைப்பது குறைந்துபோனது. இறுதியாக 2001ஆம் ஆண்டு தங்கம் எடுக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக கோலார் தங்க வயலில் சுமார் 125 ஆண்டுகள் கிட்டத்தட்ட 1000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கோலார் தங்க வயலில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுக்க மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சுரங்கத்தின் அருகே 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் குப்பைக் கிடங்குகளில்தான் சுரங்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இங்கிருக்கும் பாரத தங்கச் சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கிலேயே பல டன் தங்கம் இருக்கலாம் என்பதும் பலரது நம்பிக்கை.
இதையும் படிக்க.. வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! துபை அரசு
உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்த கோலார் தங்க வயலில் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால், இறக்குமதி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதிருக்கும் நவீன உத்திகள் மூலம், ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய முடியும் என்று கருதப்படுகிறது.
இதனால் தங்கம் விலை குறையுமா என்பதெல்லாம் பிறகுதான் தெரியும். ஆனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் நிச்சயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.