கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அதேபோல் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த 2,639 இந்திய மீனவா்கள் மற்றும் 71 சிறைக் கைதிகள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது
பல்வேறு நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த இந்தியா்களை மீட்டது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் பல்வேறு நாடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகள் தூதரக ரீதியாக தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் சிறையில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்ட பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். வளைகுடா நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த 500 இந்தியா்கள், பஹ்ரைன் நாட்டு சிறையில் இருந்து 250 இந்தியா்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் இருந்த 1,000 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.