ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக மக்களிடையே உரையாற்றினார்.
மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய ராணுவத்துக்கும், ஆயுதப் படை விஞ்ஞானிகளுக்கும் தலை வணங்குகிறேன். பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது.
அனைத்து சமுதாயம், அரசியல் கட்சிகள் ஒரே குரலில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நின்றன. இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் உலகத்துக்கு என நடக்கும் என்பதை காட்டினோம். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
பாகிஸ்தான் ராணுவம் அப்பாவி மக்கள் மீதும், குருத்வாராக்கள் மீதும் குறித்துவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் ஏவுகணைகளை தூள் தூளாக்கியது.
இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல், பாகிஸ்தான் போரை நிறுத்த கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தற்காலிகமான போர் நிறுத்தம்தான். நமது இந்திய ராணுவப் படை அவர்களை தொடர்ந்து உற்றுக் கவனித்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் நமது தலைமை இயங்குநர் லென்ஃப்டினன்ட் ஜெனரலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசினர். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி நம்மிடம் செல்லாது.
பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை வளர்த்து வருபவர்களையும் நாங்கள் இனிமேல் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. புதுமையான போர் தந்திரங்களால் நமது நாடு இன்னும் வலிமையாக மாறியுள்ளது. நமது நாட்டின் ஒற்றுமையே நமது நாட்டின் மிகப்பெரிய வலிமையாகும்.
பஹவல்பூரும், முரித்கேவும் பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருக்கின்றன. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் இனி ஒன்றாகப் பயணிக்க முடியாது. பயங்கரவாத விஷயத்தில் இனி துளியும் சமரசம் காட்டப் போவதில்லை. பயங்கரவாதிகளில் உடலுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செலுத்தியதை உலகமே உற்று நோக்கிக் கொண்டுதான் இருந்தது.
ஒவ்வொரு இந்தியரும் அமைதியையே விரும்புகின்றனர். உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதையும் உலகமே வியந்து பார்த்தது. பயங்கரவாதம் ஒருநாள் பாகிஸ்தானையே அழிக்கும். வளர்ந்துவரும் பாரதத்துக்கு ஒற்றுமையும், வலிமையும் மிகவும் முக்கியமானது. ரத்தம் பாய்ந்த நிலத்தில் தண்ணீரைப் பாய்ச்ச முடியாது” என்றார்.
இதையும் படிக்க: சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! - பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.