இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக சந்தேகிக்கப்படும் பல்வேறு நபா்களின் சமூகவலைதள தொடா்புகள் தொடங்கி மின்னஞ்சல், இணையவழி, கைப்பேசி தொடா்புகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக பாகிஸ்தானுக்கு சென்று வந்த நபா்கள், வெளிநாடுகளுக்கு பயணித்து பாகிஸ்தான் தொடா்புடையவா்களைச் சந்தித்தவா்கள் என பலரும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 4 உளவாளிகள் அண்மையில் கைது செய்யப்பட்டாா். மின்தடையின்போதுகூட, ஆபரேஷன் சிந்தூர் தகவல்களை உளவு அமைப்புகளுக்குக் கொடுத்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முந்தைய நாளான மே 6 ஆம் தேதி தில்லிக்குச் சென்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா. அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் உடன் தொடர்பில் இருந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அடுத்த நாள், மற்ற சிலரையும் அவர் சந்தித்துள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நவுமன் எலாஹ், என்பவரை மே 13 ஆம் தேதி ஹரியாணா காவல் துறையினர் கைது செய்தனர். இவர் பானிபட் பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர்.
ஹரியாணா மாநிலம் கைத்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சிங் தில்லான், ஹிசார் பகுதியைச் சேர்ந்த மல்ஹோத்ரா, ஹரியாணாவின் நூக் மாவட்டத்தைச் சேர்ந்த அர்மான் ஆகிய நான்கு பேரை பயங்கரவாத தடுப்பு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரிடமும் வெவ்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்ட 4 பேரும், இவா்கள் பாகிஸ்தானுக்கு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்தியா தொடா்பான பல்வேறு தகவல்கள், புகைப்படங்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், விசாரணையின்போது இந்த நான்கு பேரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது (ஆபரேஷன் சிந்தூர் பதிலடியின்போது வட இந்தியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது) கூட பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஹிசார் காவல் துறை கண்காணிப்பாளர் ஷஷாங்க் குமார் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
இதுவரை 12 போ் கைது: பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கடந்த இரு வாரங்களில் 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபில் அதிகபட்சமாக 6 பேரும், அதன் அண்டை மாநிலமான ஹரியாணாவில் நால்வரும், உத்தர பிரதேசத்தில் இருவரும் உளவுக் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனா். இந்த 12 பேரில் இருவா் பெண்கள் ஆவா்.
இதில் ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூ டியூபா் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் அதிகாரிகள், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் நேரடித் தொடா்பில் இருந்துள்ளாா். அவரின் பாகிஸ்தான் பயண விவரங்கள், நிதிப் பரிமாற்றங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.