அதிகரிக்கும் கரோனா பாதிப்பு (கோப்புப்படம்) 
இந்தியா

மும்பை, சென்னை, அகமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

நாட்டிலேயே மும்பை, சென்னை, அகமதாபாத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு.

DIN

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அச்சுறுத்தும் அளவுக்கு இல்லையென்றாலும், கவனிக்கத் தக்க வகையில் நோய் பாதிப்பு பதிவாகி வருகிறது.

குறிப்பாக மும்பை, சென்னை, அகமாதாபாத் நகரங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் மிகவும் சிக்கலான அதாவது உடலுறுப்பு மாற்று சிகிச்சை, பைபாஸ் அறுவைசிகிச்சை, இதய நாள மாற்று அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் தள்ளிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மும்பை

மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பே வெறும் 106 தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தற்போது 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கடுமையான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புணே

புணேவில், இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையிலும் கூட, முக்கியமான சில மருத்துவமனைகளில் கரோனா பிரிவு தொடங்கப்பட்டுவிட்டது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தற்போது 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நலமாக இருப்பவர்கள் வெளி நோயாளியாகவே சிகிச்சை பெற்று வருவதாகவும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கோடைக் காலம் தொடங்கிய பிறகும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. கடந்த வாரங்களில் பருவக்கால தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது காய்ச்சல் பாதித்து வருபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில், பருவகால தொற்றுகளின் காரணமாக காய்ச்சல் பாதித்து வந்த நிலையில் தற்போது கரோனா வைரஸ் காரணமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அதாவது, இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை காய்ச்சலுக்கான காரணமாக தொற்று ஏ அல்லது பி-ஆக இருந்து வந்த நிலையில் தற்போது காய்ச்சல் பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா முற்றிலும் அழிந்துவிடவில்லை. அது பரவிக்கொண்டே இருக்கிறது. பருவநிலைக்கு ஏற்ப அதன் பரவல் விகிதம்தான் மாறுபடுகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கர்நாடகம்

கர்நாடகத்திலும் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒரு மாதத்துக்கு ஒருவருக்குத்தான் உறுதி செய்யப்படும். கரோனா பாதித்திருக்கும் 7 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்றுக்கு இல்லை முற்று

கரோனா பெருந்தொற்று முடியவில்லை என்றும், உலகம் முழுவதும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தியாவில் பெரும்பாலும் கரோனா பாதிப்பு மிதமாக உள்ளது. இதுவரை ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலையோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கரோனா தொற்று பரவலுக்கான அடிப்படை முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT