பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கு இடையேயான தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்திய ராணுவ ரகசியங்கள், ராணுவ நடமாட்டம், முக்கிய ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை அளித்ததற்காகவும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் மோதிராம் ஜாட் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களை இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்த நிலையில், மோதிராம் ஜாட் சிக்கியுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்ஐஏ அதிகாரிகள், ஜூன் 6ஆம் தேதி வரை காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஹல்காமில் பணிபுரிந்தவர்..
கைது செய்யப்பட்டுள்ள மோதிராம் ஜாட் என்பவர் பஹல்காமின் சிஆர்பிஎஃப் 116 ஆவது படைப் பிரிவில் பணிபுரிந்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கு 6 நாள்கள் முன்புதான் பஹல்காமில் இருந்து வேறு பகுதிக்கு மோதிராம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தகவலை மோதிராம் பகிர்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டவுடன் மோதிராம் ஜாட்டை பணிநீக்கம் செய்வதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.