பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 27.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், 11 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 27.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெகுசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 30.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து லக்கிசராய் 30.32, கோபால்கஞ்சில் 30.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
எதிர்க்கட்சியான ஆர்ஜேடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
முதல் கட்ட வாக்குப்பதிவின்போது, வாக்களிப்பை மெதுவாக்கும் நோக்கத்துடன், மகாகத்பந்தனின் வாக்குச்சாவடிகளில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்படுகின்றது.
தேர்தல் ஆணையம், தீங்கிழைக்கும் நோக்கங்களுடன் இதுபோன்ற மோசடிகளை உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்கவும் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், பிகார் தலைமைத் தேர்தல் அலுவலகம் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துகிறது. பிகாரில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது.
வாக்களிப்பு செயல்முறை நியாயமானதாகவும், வெளிப்படையாகவும், தடையின்றியும் நடைபெறுவதை உறுதிசெய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்து நிலையான நெறிமுறைகளையும் பின்பற்றுகிறது. இத்தகைய தவறான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் பிகார் துணை முதல்வரும் தாராபூர் பாஜக வேட்பாளருமான சாம்ராட் சௌதரி தாராபூர் முங்கரிலும், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா லகிராயில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
அதன்பின்னர் பிகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகனும் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பாட்னாவில் வாக்களித்தனர்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தோ்தலில் களத்தில் உள்ள 1,314 வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளா் நிா்ணயிக்க உள்ளனா். இதில், 10.72 லட்சம் போ் 'முதல்முறை வாக்காளர்கள்' மற்றும் 7.78 லட்சம் பேர் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள்.
குா்ஹானி, முஸாஃபா்பூா் தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 20 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். போரே, அலெளலி (தனித் தொகுதிகள்) மற்றும் பா்பட்டாவில் குறைந்தபட்சமாக தலா 5 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்த மக்கள்தொகை 6.60 கோடியாகும்.
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்துவிட்டது! டிரம்ப் பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.