தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தினால் மக்களிடம் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்றும் புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா கூறியுள்ளார்.
தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்துப் பேசிய அவர்,
"பிரதமர் பூடானுக்குச் சென்றுவிட்டார். ஆனால் நாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலை மக்களின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு, யார் இதை திட்டமிட்டார்கள்? எந்தவகையான குண்டுவெடிப்பு என அரசு சொல்லாமல் அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அச்சமான ஒரு சூழல் நிலவுகிறது. நாட்டின் தலைநகரில் இதுபோன்ற குண்டுவெடிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.
புல்வாமா தாக்குதலில், 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் எவ்வாறு அப்பகுதியை அடைந்தது என்பது குறித்தே இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை என மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
அந்த தாக்குதல் நடந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, ஆனால் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அப்போதைய ஆளுநர் சத்பால் மாலிக் இதுகுறித்து பலமுறை கேள்விகளை எழுப்பினார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இப்போது இவ்வளவு அதிக அளவிலான வெடிபொருள்கள், வெடிகுண்டு தயாரிக்கும் உபகரணங்கள் தில்லியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்ததையே இது காட்டுகிறது.
5-6 நாள்களுக்கு முன்பு தில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப தாக்குதலினால் 800 விமான சேவைகள்பாதிக்கப்பட்டன. இது ஜி.பி.எஸ். அமைப்பின் ஏமாற்று வேலை, இது ஒரு பெரிய சைபர் தாக்குதல் என்றும் நிபுணர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். ஆனால் இன்றுவரை அதுகுறித்து மத்திய அரசிடம் எந்த பதிலும் இல்லை.
விமானப் போக்குவரத்து அமைச்சர், உள்துறை அமைச்சர் என யாரும் இதற்கு பதிலளிக்கவில்லை. நாட்டில் அச்சமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவரின் மனதிலும் பயம், பதட்டம் இருக்கிறது. பதில்கள் கிடைக்காதபோது பயம் வரும்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | கனத்த இதயத்துடன் வந்திருக்கிறேன்; சதிகாரர்கள் தப்ப முடியாது! - பூடானில் மோடி பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.