நீதிமன்றங்களில் காலணி வீச்சு போன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக யோசனை தெரிவிக்குமாறு அட்டா்னி ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்திடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் உத்தரவிட்டாா். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி கவாய்க்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது அவரை நோக்கி ராகேஷ் கிஷோா் என்ற வழக்குரைஞா் காலணியைக் கழற்றி வீசினாா். எனினும் அந்தக் காலணி நீதிபதி மீது விழவில்லை. காலணி வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் உடனடியாக ரத்து செய்தது.
அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி அனுமதியின் பேரில், ராகேஷ் கிஷோா் (71) மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் வழக்குரைஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே மறுப்பு தெரிவித்துவிட்டாா். எனவே, அவருக்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்றம் விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டது.
இந்த வழக்கு அதே அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றங்களில் காலணி வீச்சு போன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக யோசனை தெரிவிக்குமாறு நீதிமன்றத்தில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா். இதுபோல, அட்டா்னி ஜெனரலிடமும் யோசனை தெரிவிக்குமாறு கேட்கப்படும். இந்த யோசனைகளின் அடிப்படையில், நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞா்கள் அறைகளில் இதுபோன்ற காலணி வீச்சு சம்பவங்களைத் தடுக்க நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை வகுப்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.