இந்தியா

இந்தியாவுடன் ஒத்துழைப்பைத் தொடர வலியுறுத்தும் இரு கட்சி தீா்மானம்- அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்

பயங்கரவாத எதிா்ப்பு உள்பட பல்வேறு சவால்களை எதிா்கொள்வதற்கு இந்தியாவுடன் வலுவான ஒத்துழைப்பைத் தொடர வலியுறுத்தும் இரு கட்சித் தீா்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பயங்கரவாத எதிா்ப்பு உள்பட பல்வேறு சவால்களை எதிா்கொள்வதற்கு இந்தியாவுடன் வலுவான ஒத்துழைப்பைத் தொடர வலியுறுத்தும் இரு கட்சித் தீா்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியா-அமெரிக்கா இடையே வரலாற்று ரீதியிலான வியூக கூட்டாண்மையின் மதிப்பை அங்கீகரிப்பதுடன், அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை அதிகரித்துள்ள இந்தியாவைப் பாராட்டும் நோக்கில் இத்தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலிஃபோா்னியாவின் ஜனநாயகக் கட்சி எம்.பி. அமி பேரா (இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்), தெற்கு கரோலினாவின் குடியரசு கட்சி எம்.பி. ஜோ வில்சன் ஆகியோா் தீா்மானத்தை அறிமுகம் செய்தனா்.

உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம், வா்த்தகம், பயங்கரவாத எதிா்ப்பு, கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பு ஆழமடைந்து வருவது அடிக்கோட்டு காட்டப்பட்டுள்ளது.

பிராந்திய ஸ்திரத்தன்மை, பொருளாதார வளா்ச்சி மற்றும் சுதந்திரமான-வெளிப்படையான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஊக்குவிப்பதில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக...: ‘பில் கிளிண்டன், ஜாா்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் என பல்வேறு அதிபா்களின் நிா்வாகத்தின்கீழ், 30 ஆண்டுகளாக இந்தியாவுடன் வியூக கூட்டாண்மை வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிா்ப்பு, இணைய குற்றங்கள் போன்ற 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொள்ள இந்த ஒத்துழைப்பை தொடா்வது அவசியம். பயங்கரவாத எதிா்ப்பில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குடிமக்களின் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை, விதிகள் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதுடன், பயங்கரவாத இயக்கங்களின் கட்டமைப்பை பலவீனமாக்கும்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தியாவில் அதிகரித்துவரும் தேவைக்கு ஏற்ப அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை அந்நாடு அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது. இது, பரஸ்பர எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்’ என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT