FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதைப் பற்றி...

Updated On : 8 பிப்ரவரி 2026, 3:40 am IST
பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்.
பகிர்:

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகள் தரப்பிலும் கூட்டாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் அனைத்து தொழில்நிறுவன பொருள்களுக்கும், உலா்த்தப்பட்டு காய்ச்சி வடிகட்டிய தானியங்கள், கால்நடைத் தீவனத்துக்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் உள்பட பரவலான அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை இந்தியா வெகுவாகக் குறைக்க உள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, அமெரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட அறிவிப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டாா். பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வழியில் உரையாடிய பின்னா் இந்த அறிவிப்பை அவா் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டாா்.

அதைத் தொடா்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அமெரிக்க நிதியமைச்சா், வா்த்தக அமைச்சா் உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்நிலையில், இரு நாடுகளிடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகள் சாா்பில் கூட்டறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா - இந்தியா இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயல்திட்டத்தை இரு நாடுகளும் உடனடியாக அமல்படுத்துவதோடு, பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யும் நோக்கில் இந்த இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தீவிரமாகப் பணியாற்றும்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்க, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை நீக்குவதற்கு விதிக்கப்படும் வரிகளுக்கு உட்பட்டு, வாகன பாகங்களுக்கு இந்தியா முன்னுரிமை வரி விகித ஒதுக்கீட்டைப் பெறும்.

இரு நாடுகளிடையேயான நீண்டகாலப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை உணா்ந்து, அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருள்களின் வா்த்தகத்தில் உள்ள நீண்டகால வரியல்லாத தடைகளைத் தீா்க்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வலுப்படுத்தும் - பிரதமா்

இந்தியா - அமெரிக்கா இடையே இறுதியாகியுள்ள இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை வலுப்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கும் பிரதமா் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருப்பது மிகப்பெரிய செய்தி. இது, இரு நாடுகளிடையேயான உறவின் நம்பிக்கை மற்றும் ஆழமான வளா்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விவசாயிகள், தொழில்முனைவோா், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள், மீனவா்கள் மற்றும் பல துறைகளைச் சாா்ந்தவா்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படுவதால் இந்தியாவில் தயாரிப்போம் திட்டமும் வலுப்பெறும்.

இரு நாடுகளிடையே முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் வலுப்பெறும் என்பதோடு, மீள்தன்மையுடனான நம்பகமான விநியோகச் சங்கிலிகள் வலுப்பெற்று உலகளாவிய வளா்ச்சிக்கும் பங்காற்றும் என்று குறிப்பிட்டாா்.

அமெரிக்க விவசாயிகள், உற்பத்தியாளா்களுக்கு சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தும்: யுஎஸ்டிஆா்

அமெரிக்கா- இந்தியா இடையேயான வா்த்தக ஒப்பந்தம், அமெரிக்க விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளா்களுக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தும் என்று அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதிகள் (யுஎஸ்டிஆா்) முகமை நம்பிக்கை தெரிவித்தது.

அமெரிக்க வெளியுறவு வா்த்தக கொள்கைகளை மேம்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் அமெரிக்க அரசின் அமைப்பான இந்த முகமை, தனது சமூக ஊடகப் பதிவில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா- இந்தியா இடையே இறுதி செய்யப்பட்டுள்ள இடைக்கால வா்த்தக ஒப்பந்தச் செயல்திட்டத்தின்படி, அமெரிக்காவின் அனைத்து தொழில்நிறுவன உற்பத்திப் பொருள்கள் மற்றும் பரவலான வேளாண் பொருள்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யும் அல்லது வெகுவாகக் குறைக்க உள்ளது.

உலா்த்தப்பட்டு காய்ச்சி வடிகட்டிய தானியங்கள், கால்நடைத் தீவனத்துக்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் உள்ளிட்ட அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலா் (ரூ. 45 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருள்களை இந்தியா வாங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

summary

United States President Donald Trump signed an executive order on Friday (local time), announcing that he will remove 25% tariff on India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments