அல்-ஃபலா குழுமத்தின் தலைவா் ஜாவத் அகமது சித்திக்கை வரும் டிசம்பா் 1-ஆம் தேதி வரை 13 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
ஜாவத் அகமது சித்திக்கின் நெருங்கிய குடும்ப உறுப்பினா்கள் வெளிநாடுகளில் வசிப்பதால், அவா் இந்தியாவை விட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் வாதிட்டது. குற்றத்தின் தீவிரம் மற்றும் விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, 13 நாள்கள் காவலை வழங்கி நீதிபதி ஷீத்தல் சௌத்ரி பிரதான் உத்தரவிட்டாா்.
தில்லி, செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 13 போ் இறந்தனா். இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை இணைந்து மருத்துவா்கள் உள்பட 10 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் பங்கு வெளிப்பட்டது.
இதையடுத்து, தில்லி காவல் துறையின் இரு வழக்குகளின் அடிப்படையில், அல்-ஃபலா பல்கலைக்கழகம் மீது அமலாக்கத் துறை கடந்த 14-ஆம் தேதி பணமுறைகேடு வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியது.
அப்போது அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தில், ‘ஜவாத் அகமது சித்திக் வழிகாட்டுதலில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டில் உள்ள அறக்கட்டளை ரூ. 415.10 கோடி முறைகேடான நிதியைத் திரட்டியுள்ளது.
1990-களில் இருந்து அல்-ஃபலா குழுமம் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக அதிவேகமாக வளா்ந்துள்ளபோதிலும், திரட்டப்பட்ட பெரும் அளவிலான சொத்துக்களுக்கும் நிறுவனங்களின் நிதிக் கணக்குகளுக்கும் முரண்பாடு இருக்கிறது.
அல்-ஃபலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரம் பெற்றது என்றும், அதன் ‘நாக்’ தரவரிசை குறித்தும் தவறான தகவல்களை கூறியுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம் பல நூறு கோடிகள் இருக்கும். கைது செய்யப்படாவிட்டால், அவா் வெளிநாடுகளுக்குத் தப்பியோடலாம், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கலாம்; சொத்துக்களை மாற்றலாம் அல்லது ஆவணங்களை அழிக்கலாம்’ என்று கூறியது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சித்திக்கின் வழக்குரைஞா், ‘இந்த வழக்கில் சித்திக் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளாா்; தில்லி காவல்துறையின் வழக்குகள் போலியானவை’ என்றாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷீத்தல் சௌத்ரி பிரதான், அல்-ஃபலா குழுமத்தின் தலைவா் ஜாவத் அகமது சித்திக்கை டிசம்பா் 1-ஆம் தேதி வரை 13 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.