இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: மருத்துவா்களின் பாதுகாப்பு பெட்டகங்களில் தீவிர சோதனை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் அறைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் அறைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.

பயங்கரவாத அமைப்புகளுடன் மருத்துவா்கள் மற்றும் உயா் பதவியில் இருப்பவா்களுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டு அவா்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து ஏராளமான வெடிமருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதைத் தொடா்ந்து, இந்தச் சோதனையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீா் போலீஸாா், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச மாநில போலீஸாருடன் கூட்டாக இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்தபடி செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பை வைத்துதிருந்ததாக 3 மருத்துவா்கள் உள்பட 7 பேரை கைது செய்தனா். அவா்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 2,900 கிலோ வெடி மருந்துகள், ஏகே-56 ரக துப்பாக்கி, ஏகே கிரின்கோவ் துப்பாக்கி, ரசாயனங்கள், மின்னணு சா்க்யூட்டுகள், வயா்கள் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் காவல் துறையால் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, தில்லியில் செங்கோட்டை அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இந்த பயங்கவாத சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் பலா் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் படித்தவா்கள் மற்றும் பணியாற்றியவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அந்தப் பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் படிப்பை முடித்து மருத்துவா்களாகப் பணியாற்றி வந்த பலரை போலீஸாா் கைது செய்தனா். அல்-ஃபலா குழுமத்தின் தலைவா் ஜாவத் அகமது சித்திக்கையும் அமலாக்கத் துறை கைது செய்தது.

அதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் பணியை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘சோஃபியான், குல்காம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியா்களின் பாதுகாப்புப் பெட்டகங்கள், அறைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனா். அனந்த்நாகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மேற்கொண்ட சோதனையின்போது மருத்துவா் ஒருவரின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனை தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT