தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பாபா சித்திக் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தாதா அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புதன்கிழமை நாடு கடத்தப்பட்டாா்.
தில்லிக்கு கொண்டுவரப்பட்ட அவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனா். பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜா்படுத்தப்பட்ட அவா், 11 நாள் என்ஐஏ காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
பாபா சித்திக் கொலை மட்டுமன்றி பாலிவுட் நடிகா் சல்மான் கான் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு, பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தாா். தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரரான அவா், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த மத்திய அரசுத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக, தற்போது நாடு கடத்தி அழைத்து வரப்பட்டுள்ளாா்.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்புடைய தாதா கும்பலை இயக்கியதாக அன்மோல் பிஷ்னோய் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. இதில் முக்கியத் தகவல்கள் அம்பலமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சா் பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது மகன் ஜீஷனின் அலுவலகம் முன் கடந்த ஆண்டு அக்டோபரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான தாதா கும்பலுடன் தொடா்புடைய பலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.