ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள அல் - பலாஹ் பல்கலையின் பேராசிரியர்கள் சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய பல பேராசிரியர்கள், ஊழியர்கள், உள்ளூர் மக்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்கலையின் அனைத்துப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து கண்டறிய ஹரியாணா காவல்துறைக்கு, டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் மாத தொடக்கத்தில், அல் பலாஹ் பல்கலையில் பேராசிரியர்களாக இருந்த சிலர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நவ.10ஆம் தேதி தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தற்கொலைப் படையாக செயல்பட்ட உமர் நபி, இந்தப் பல்கலையின் பேராசிரியர் என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில்தான், தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, பல்கலையில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் சிலரும், அந்த பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்த சிலரும், எங்கே சென்றார்கள் என்பது தெரியாமல் மாயமாகியிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் பேராசிரியர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள். அந்த பல்கலை அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலரும் காணாமல் போயிருக்கிறார். அவர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பல்கலையின் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்தான் கைது செய்யப்பட்டிருக்கும் மருத்துவர்கள் ஷாஹீன் ஷாஹித், முஸாமில் அகமது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.