கர்நாடகத்தின் முதல்வர் பதவி விவகாரம் குறித்து பொது அறிக்கைகள் வெளியிடக் கூடாது என அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்பட்டு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி உயர்த்தப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், முதல்வர் பதவியில் எந்தவொரு மாற்றமும் இல்லை என முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். இருப்பினும், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவர் முதல்வராகப் பதவியேற்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் முதல்வர் பதவி குறித்து பொது அறிக்கை வெளியிடக்கூடாது என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசுக்கு எதிராக பாஜக அவதூறு பரப்புவதாகவும் கர்நாடக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:
“அனைத்து 140 சட்டப்பேரவை உறுப்பினர்களும் எனது எம்.எல்.ஏக்கள்தான். பிரிவிணையை உருவாக்குவது எனது ரத்தத்தில் இல்லை. அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் முடிவு செய்துள்ளார். அமைச்சராக வேண்டும் எனும் நோக்கம் அனைவருக்கும் உண்டு. அதனால், அவர்கள் கட்சியின் தலைவர்களைச் சந்திக்க தில்லிக்குச் சென்றுள்ளனர்.
5 ஆண்டுகளையும் நிறைவு செய்வேன் என முதல்வர் கூறியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். நாங்கள் அவருடன் இணைந்து செயல்படுவோம். ஏற்கெனவே, சொன்னதுபோல் நானும் முதல்வரும் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, டி.கே. சிவக்குமாருக்கு ஆதரவளிக்கும் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஒருவர் நேற்று தில்லிக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.