விழுந்து எரிந்து தேஜஸ் 
இந்தியா

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

தேஜஸ் விமானத்தில் எண்ணெய்க் கசிவு இருந்ததாக வெளியான தகவலை இந்தியா மறுத்திருந்த நிலையில் துபையில் விழுந்து நொறுங்கியது.

இணையதளச் செய்திப் பிரிவு

தேஜஸ் விமானத்தில் எண்ணெய்க் கசிவு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியாகி அதனை மத்திய அரசு தரப்பில் நிராகரித்திருந்த நிலையில், இன்று துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில், பல்வேறு நாட்டு போர் விமானங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் பங்கேற்றிருந்தன.

அப்போது, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் வானில் சாகசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. நேற்று, துபையில் விமானக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள தேஜஸ் விமானத்தில் எண்ணெய்க் கசிவு இருந்ததாக விடியோவுடன் தகவல்கள் வெளியான நிலையில், இன்று இந்த விபத்து நேரிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துபை விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம், மூன்றாவது விமானமாக வானில் பறக்கத் தொடங்கியது. ஆனால், சாகசம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது திடீரென விமானம் தரையில் இறங்கத் தொடங்கி, யாரும் எதிர்பாராத வகையில், அது விழுந்து நொறுங்கி எரியத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு அல் மக்தும் விமான நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேஜஸ் விமானத்தின் விமானி இந்த விபத்தில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, வியாழக்கிழமையன்று, சமூக வலைத்தளங்களில், துபையில் நடைபெறும் விமானக் கண்காட்சிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கும் தேஜஸ் எம்கே1 விமானத்தில் எண்ணெய்க் கசிவு இருந்ததாக ஒரு விடியோ வெளியாகியிருந்தது.

ஆனால், அந்த விடியோ உண்மையல்ல என்றும், விமானத்திலிருந்து வழக்கமாக திரவத்தை வெளியேற்றும் ஒரு செயல்பாட்டின்போது எடுக்கப்பட்ட விடியோ, அது தொழில்நுட்பக் கோளாறு அல்ல என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

பிஐபியின் உண்மை கண்டறியும் அமைப்பு வெளியிட்ட தகவலில், விமானத்திலிருந்து திரவம் வெளியேறுவதைக் காட்டும் விடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவை உண்மையில் விமானத்தின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு (ECS) மற்றும் விமானத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி அமைப்பு (OBOGS) ஆகியவற்றிலிருந்து அழுத்தப்பட்ட நீரை வெளியேற்றும்போது எடுக்கப்பட்ட விடியோக்கள்.

துபை போன்ற அதிக புழுக்கம் உள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் சாதாரண விமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடியோ, போலியானது என்றும், தவறான தகவல்களை பரப்பும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று நடைபெற்ற விமானக் கண்காட்சியில், தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி எரிந்திருப்பதற்குக் காரணம், நேற்று வெளியான எண்ணெய்க் கசிவு புகார்தானோ என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

எனினும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Tejas plane crashed in Dubai after India denied reports of an oil leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது: டெம்பா பவுமா

தவறான அணுகுமுறையால் கோவை மெட்ரோ பணியில் தாமதம்: இபிஎஸ்

சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள் திறப்பு!

ஜன நாயகன் இசை வெளியீட்டுத் தேதி!

முதல்வர் பதவி விவகாரம்! கர்நாடக எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT