கேரளத்தில் மணப்பெண் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழாவின் கொம்மடியைச் சேர்ந்த அவனி மற்றும் தம்போலியைச் சேர்ந்த வி.எம். ஷரோன் ஆகியோரின் திருமணம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. முன்னதாக இருவருக்கும் வெள்ளிக்கிழமை நண்பகல் தம்போலியில் திருமணம் நடைபெறவிருந்தது.
மணப்பெண் அலங்காரத்திற்காக அவனி குமரகோமுக்கு பயணித்தபோது அதிகாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் அவர் காயமடைந்தார்.
உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அவனிக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதால், சிறப்பு சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் மணமகன் ஷரோனும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். திருமணத்தை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த வேண்டும் என இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.
தங்களின் இந்த விருப்பதை மருத்துவர்களுடன் தெரிவித்து அனுமதியும் பெற்றனர். உடனே அதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை அதிகாரிகள் செய்தனர்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவனி கழுத்தில் மணமகன் ஷரோன் சுப நேரத்தில் தாலி கட்டினார்.
அவனிக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று நரம்பியல் அறுவை சிகிச்சைத் தலைவர் மருததுவர் சுதீஷ் கருணாகரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.