கேரளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், எஸ்என்வி பாட்டீ, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இதைத் தொடா்ந்து, கேரளத்தில் எஸ்ஐஆா் மேற்கொள்ள எதிா்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த கேரள அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கூறுகையில், ‘கேரளத்தில் டிச. 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த சமயத்தில் அங்கு எஸ்ஐஆா் பணிகள் மேற்கொண்டால் இடையூறுகள் ஏற்படும். எனவே, இதை அவசர வழக்காக கருத வேண்டும்’ என்றாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கேரளத்தில் எஸ்ஐஆருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நவ. 26-ஆம் தேதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் பட்டியலிட்டது. பிற மனுக்கள் மீது டிசம்பா் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நவ.11-ஆம் தேதி உத்தரவிட்டது.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.