புது தில்லி: துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது விழுந்து எரிந்த தேஜஸ் விமான விபத்து குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படை கூறியிருப்பதாவது, துபை விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.
விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது, இந்த துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்போம்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது.
துபையில் இன்று நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார்.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனமும் இந்திய விமானப் படையும் இணைந்து உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த தேஜஸ் போர் விமானம். தேஜஸ் போர் விமானம் குறைந்த எடை, அதீத திறன் என்ற முறையில் செயல்படக் கூடியது. வானில் பறக்கும்போதே எரிபொருளை நிரப்பிக்கொள்ள முடியும். இதன் மூலம் நீண்ட தொலைவுக்கு ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.
இன்று நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, தேஜஸ் விமானம் வேகமாகப் பறந்து திரும்ப வேண்டிய நிலையில், தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்துகொண்டது. விமானக் கண்காட்சியைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் அனைவரும் இந்த விபத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தேஜஸ் விமானம் உள்நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து ஆண்டுகளிலும் பல்வேறு முறைகளில் அதன் தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தேஜஸ் விமானத்துக்கு வானில் பறந்தபடி எரிபொருள் நிரப்பும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இலகு ரக தேஜஸ், விமானம் தாங்கி போர்க் கப்பலிலிருந்து பறந்தும், தரையிறங்கியும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, தேஜஸ் போர் விமானம் மூலமாக விண்ணில் உள்ள இலக்குகளை அழித்து தாக்கும் ஏவுகணைச் சோதனையும் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், ‘தேஜஸ்’ இலகு ரக போா் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, தேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் இருந்து இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. துபை கண்காட்சியில் தேஜஸ் விமானம் விழுந்து எரிந்தது! விமானி பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.