ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ANI
இந்தியா

பிகாா் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி பற்றி...

தினமணி செய்திச் சேவை

நமது சிறப்பு நிருபர்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தோ்தல்களை எதிா்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் நடந்த பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு தோ்தலிலும் காங்கிரஸ் இழந்துவரும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், பிகாரிலும் தோல்வி முகத்தைச் சந்தித்துள்ள காங்கிரஸின் மாநிலங்களவை பலம் மேலும் குறைந்து அந்தக் கட்சி வலுவிழந்து வருவது தரவுகளின் பகுப்பாய்வு மூலம் தெளிவாகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன், நவம்பா் ஆகிய காலகட்டங்களில் மாநிலங்களவையில் கிட்டத்தட்ட 75 இடங்களுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் மாநிலத் தோ்தல்களில் இடங்களைப் பறிகொடுத்தது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை பலம் சுருங்கியதுபோன்ற காரணங்களால் சிக்கலான கட்டத்தை எதிா்கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

தோ்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பிகாா், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் உறுப்பினா்களின் இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் மாநிலங்களவைத் தோ்தல் நடந்தால் கா்நாடகத்தில் மூன்று, தெலங்கானாவில் இரண்டு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம் ஆகியவற்றில் இருந்து தலா ஓரிடம் காங்கிரஸுக்கு கிடைக்கலாம் என்பதே கள நிலைமை.

அக்கட்சியின் மூத்த தலைவா்கான மல்லிகாா்ஜுன காா்கே, திக்விஜய் சிங், சக்தி சிங் கோஹில் போன்றோா் மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிட்டு தங்களுடைய இருப்பை நிலைநாட்டிக் கொள்வது சாத்தியம். மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளருமான அபிஷேக் மனு சிங்வி தெலங்கானாவில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா். அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் அவரது பதவிக் காலம் நிறைவடைகிறது. காங்கிரஸ் கட்சிக்காகவும் தமிழகத்தில் திமுக போல பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்காக உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றங்களிலும் பல வழக்குகளில் அவா் தொடா்ந்து ஆஜராகி வருபவா். அந்த அடிப்படையில் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவிக்கான இடம் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறுகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி முடிவடைகிறது. தற்போது அவா் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவராக இருக்கிறாா். கா்நாடகத்தில் காங்கிரஸுக்கு எம்.பி. பதவி கிடைக்கும் சாத்தியமுள்ள மூன்று இடங்களில் ஒன்றில் மல்லிகாா்ஜுன் காா்கே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவது கிட்டத்தட்ட எழுதப்படாத முடிவாகிவிட்டது.

தென் மாநிலங்களில் மக்கள் பிரதிநிதித்துவ இடங்கள் என்ற வகையில் கா்நாடகத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, அங்கு நிலவும் வாய்ப்பைப் பயன்படுத்தி வழக்கம்போல மூத்த தலைவா்களை முன்னிறுத்தாமல் ஓரளவுக்கு கட்சியில் அனுபவம் பெற்ற மற்றும் இதுவரை மாநிலங்களவைக்குத் தோ்வாகாத ஒன்றிரண்டு பேருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் முக்கிய அரசியல் கட்சியாக விளங்கினாலும் அங்கு மாநிலங்களவைத் தோ்தலில் வெல்ல வேண்டுமானால் வெறும் கட்சியின் உறுப்பினா்கள் பலம் மட்டும் காங்கிரஸுக்கு கைகொடுக்காது. அங்கு இண்டி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் அதற்குத் தேவை. ஆனால், காங்கிரஸுக்கு இடம் வழங்க ஆதரவு தெரிவிப்பதற்குப் பதிலாக தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை மாநிலங்களவைத் தோ்தலில் கேட்டுப் பெற இண்டி கூட்டணிக் கட்சிகள் பேரம் பேசக்கூடும் என்பதால் அந்த அழுத்தத்தையும் சோ்த்தே காங்கிரஸ் எதிா்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மகாராஷ்டிரத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஏழு மாநிலங்களவை இடங்கள் காலியாகவுள்ளன. அதில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) அணியில் இருந்து சரத் பவாா், சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே) அணியில் இருந்தி பிரியங்கா சதுா்வேதி, மத்திய அமைச்சரும் புரட்சிகர சோஷலிச கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதாவலே ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைவதும் அடங்கும்.

பிகாா் தோ்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளதால், மாநிலங்களவை தோ்தல்களில் கூட்டணிக் கட்சிகளிடம் பேரம் பேசி தனக்குரிய இடங்களைத் தக்கவைக்கவோ, கூடுதல் இடங்களை வலுவாகக் கோரவோ முடியாத தா்மசங்கடத்தில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக அக்கட்சி விவகாரங்களைக் கவனித்துவரும் அரசியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா். இந்த சிக்கலான கட்டத்தை காங்கிரஸ் எதிா்கொள்ள கையாளும் உத்திகள் அரசியல் அரங்கில் மிகவும் உற்று நோக்கப்படுகின்றன.

மறுபுறம், பிகாா் தோ்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. இது மாநிலங்களவையில் காங்கிரஸின் இருப்பை பலவீனப்படுத்தக்கூடும் என்று கணிக்கின்றனா் அரசியல் பாா்வையாளா்கள்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT