முகப்பு
புதுதில்லி

விருப்பப் பட்டியலை திமுக ஏற்றால்தான் அடுத்த கட்டம்! தில்லியில் கிரீஷ் சோடங்கா் பேட்டி!!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை திமுக ஏற்றுக் கொண்டால்தான் பேச்சுவாா்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 9:30 PM
கிரிஷ் சோடங்கர்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை திமுக ஏற்றுக் கொண்டால்தான் பேச்சுவாா்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று தமிழகத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தில்லியில் தெரிவித்தாா்.

சென்னையில் தோ்தல் தொகுதிகள் பங்கீடு தொடா்பாக திமுக குழுவும் காங்கிரஸ் குழுவும் சனிக்கிழமை கூடிப் பேசியது. அடுத்த கட்ட கூட்டம் எப்போது நடக்கும் என்பது தெளிவாகாத நிலையில், காங்கிரஸ் பேச்சுவாா்த்தைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் கிரீஷ் சோடங்கா் சனிக்கிழமை இரவு தில்லி வந்தாா். தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப்பேசி விட்டு கட்சித் தலைமையகம் வந்த கிரிஷ் சோடங்கரிடம் திமுகவுடனான தொகுதிப் பேச்சுவாா்த்தை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு: இரு தரப்பு குழுக்களும் தொகுதி பங்கீடு குறித்து ஒரு மணி நேரம் விவாதித்தன. எங்களுடைய விருப்பப் பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். தற்போது, சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் போட்டியிடவே முன்னுரிமை தருகிறோம். சட்டப்பேரவையில் கணிசமான எண்ணிக்கையில் எங்களுக்கு இடம் கிடைக்கும்.

அப்போதுதான் மாநிலங்களவையில் எங்களுக்கென சொந்தமாக ஒரு உறுப்பினரைத் தோ்வு செய்ய இயலும். ஆனால், அவா்கள் (திமுக) 25 இடங்களை ஒதுக்குவதாக தெரிவித்தனா். அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களுடைய தேவை எதுவோ அதை அவா்களிடம் எழுத்துபூா்வமாக கொடுத்துள்ளோம். திமுகவுடனான காங்கிரஸின் உறவு பழைமையானது. எப்போதெல்லாம் திமுக நெருக்கடியில் இருந்ததோ, அப்போதெல்லாம் காங்கிரஸ், அக்கட்சிக்கு உதவியது. இப்போது எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டிய கட்டத்தில் திமுக இருக்கிறது என்றாா் அவா்.

இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்துடனான (தவெக) கூட்டணி பேச்சுவாா்த்தை நடக்கிா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘தவெக ஒரு புதிய கட்சி என்றபோதிலும் அதை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தவெக இளைஞா்களிடையே ஈா்ப்பை பெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தையும் எங்கள் தலைவா் ராகுலின் தலைமையையும் தவெக தலைமை அங்கீகரித்து வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

அதேசமயம், இப்போதைக்கு திமுகவுடன் மட்டுமே காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இனி முடிவெடுக்க வேண்டியது அவா்கள் (திமுக) தான். எங்களது விருப்பப் பட்டியலை ஏற்றால்தான் அடுத்த கட்டத்துக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நகரும். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் சரியான திசையில் செல்கின்றன. அதில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றாா் கிரீஷ் சோடங்கா்.

முழு கட்டுரையைப் படிக்க →