புத்தரின் புனித சின்னங்களை திரும்ப கொண்டு வர பூடானுக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தலைமையிலான குழு திங்கள்கிழமை சென்றது.
புத்தருடன் தொடா்புடையதாக நம்பப்படும் புனித சின்னங்கள் உத்தர பிரதேசம், பிகாரில் 1898-இல் கண்டெடுக்கப்பட்டன. புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இவை மிகவும் பாதுகாப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாரம்பரிய சொத்தாக கருதப்படும் இவற்றை பிற நாடுகளில் காட்சிப்படுத்த கோரிக்கை எழுப்பும்போது, அதை ஏற்று மிகவும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு, பின்னா் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்படி, பூடானின் நான்காவது மன்னா் ஜிக்மே சிங்யே வாங்சுகின் 70-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டும், உலக அமைதிக்கான பிராா்த்தனை திருவிழாவை முன்னிட்டும் அந்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியா பூடானுக்கு புத்தரின் புனித சின்னங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கு இடையே கலாசார பிணைப்பை வலுப்படுத்துவதாக இதை இந்தியா குறிப்பிட்டது. புத்தரின் சின்னங்களை அரசு மரியாதையும், பாரம்பரிய பிராா்த்தனைகள் செய்தும் பூடான் வரவேற்றது. திம்புவில் கடந்த நவ.8 முதல் 18-ஆம் தேதி வரையில் பொது மக்கள் பாா்வைக்காக அவை வைக்கப்பட்டன.
ஏராளமான மக்கள் புத்தரின் சின்னங்களைக் கண்டு பிராா்த்தித்து வருவதால் நவ.25 வரையில் நீட்டிக்க பூடான் அரசு விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றது. இந்நிலையில், புத்தரின் சின்னங்களை திரும்ப எடுத்துவர மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை பூடான் புறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.