எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது.
இதன்காரணமாக, தில்லி, ஹரியாணா பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ள நிலையில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டில் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. கடந்த 10,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, நேற்று திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதனால், பல கிலோ மீட்டர் உயரத்துக்கு கரும்புகைகள் எழுந்த நிலையில், லாவா குழம்பும் வெளியேறி வருகின்றது. அப்பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.
இந்தியாவுக்கு பாதிப்பு
ஹேலி குப்பி எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் மேகக் கூட்டங்கள் நேற்றிரவு இந்திய வான் பரப்பை அடைந்தது. குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா வழியாக தில்லி வான் பரப்பிலும் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன.
இதனால், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விமான சேவைகள் பாதிப்பு
சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை சுமார் 10 முதல் 15 கி.மீ. உயரம் வளிமண்டலம் வரையில் பரவியுள்ளன.
இதன்காரணமாக, இந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.