நிதி மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாட்டில் மரணமடைந்தவர்களின் பெயர்களில் இருந்த 2 கோடி ஆதார் எண்கள் நீக்கப்பட்டு உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆதார் எண் திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களின் தகவல்கள் திரட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் மரணமடைந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆதார் கார்டுகளின் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்கவும், ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் நாடு முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2 கோடி ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு உறுதி செய்யப்பட்ட தரவுகளின்படி, அதாவது, இந்திய பதிவாளர் ஆணையம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பொது விநியோக திட்ட தரவுகள், தேசிய சமூக உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து நாடு முழுவதும் மரணமடைந்தவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு, ஒன்றுடன் ஒன்று சரிபார்க்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டிருந்தாலும் அவை வேறு யாருக்கும் புதிதாக வழங்கப்பட மாட்டாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் பெயர்களால் அவர்களது ஆதார் எண்களை வைத்து மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்க முதற்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட மாநிலங்களில், இறந்தவர்களின் தகவல்களைப் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஒரு குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்துவிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, ஆதார் ஆணைய இணையதளம் மூலமாக குடும்ப உறுப்பினர்கள், ஆதார் எண்ணை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. 2030-ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.