ஓடும் ரயிலில், செல்போன் சார்ஜ் செய்ய அளிக்கப்பட்டிருந்த வசதியைப் பயன்படுத்தி, சுடுநீர் தயாரிக்கும் கெட்டிலில், நூடுல்ஸ் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை விடியோ எடுத்து வெளியிட்ட பெண்ணை ரயில்வே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் கெட்டிலில் தண்ணீரை ஊற்றி, அதனை போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் இணைத்து நூடுல்ஸ் தயாரித்துக் கொடுத்த பெண்ணின் விடியோ ஒன்று ஒரு சில நாள்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால், செல்போன் சார்ஜ் போடும் வசதியைப் பயன்படுத்தி கெட்டிலில் சமைத்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியிருந்தது. இது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அப்பெண்ணின் முகவரியை தேடிக் கண்டுபிடித்துள்ளது இந்திய ரயில்வே. புனேவில் உள்ள சின்ச்வாத் பகுதியைச் சேர்ந்த சரிதா லிங்காயத் என்பவர்தான் ரயிலில் நூடுல்ஸ் தயாரித்தவர் என்பது கண்டறியப்பட்டு, அவர் மீது ரயில்வே சட்டம் 154ன் கீழ், பயணிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரயிலில் நூடுல்ஸ் தயாரித்தது குற்றம்தான் என்று மன்னிப்புக் கோரும் விடியோ ஒன்றையும் பகிருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக். 16 அன்று, ஹரித்வாரிலிருந்து புனே சென்றுகொண்டிருருக்கும்போது, சரிதா ரயிலில் நூடுல்ஸ் தயாரித்துள்ளார். சமையலறை எங்கும் எப்போதும் என்று மிகவும் உற்சாகமாகப் பேசியபடியும், விடுமுறைப் பயணங்களின்போதும் தங்களுக்கு விடுமுறை இல்லை என்று சரிதா விடியோவில் பேசியிருந்தார்.
எங்கள் பெட்டியில் சில சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக நூடுல்ஸ் தயாரித்ததாகவும், அன்றைய நாள் நாங்கள் விரதம் என்பதால், கெட்டிலில் தேநீர் தயாரித்து அங்கிருந்த முதியவர்கள் பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
சரிதா வெளியிட்ட விடியோவில், ரயிலில் கெட்டிலைப் பயன்படுத்தக் கூடாது என்பது தெரியாமல், இந்த தவறை செய்துவிட்டதாகவும், யாருக்கும் ஆபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரயிலில், நூடுல்ஸ் தயாரிப்பது போன்ற எந்த மின்னணு சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம். அது தவறு மட்டுமல்லாமல், ரயிலில் இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்து. எனக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மும்பை ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு நன்றி. என்னைப் போல வேறு யாரும் தவறுகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவரும் இந்திய ரயில்வேக்கு நன்றி. நான் மீண்டும் இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.