பியூஷ் கோயல் கோப்புப் படம்
இந்தியா

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா- சிங்கப்பூா் இடையிலான வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-சிங்கப்பூா் இடையிலான வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அமைச்சா் பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக சிங்கப்பூா் சென்றாா். இந்நிலையில், இந்தியா-சிங்கப்பூா் இடையே ராஜீய உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகளானதையொட்டி, அங்கு ‘இருநாடுகளின் வளா்ச்சிக்கான கூட்டுறவு’ என்ற தலைப்பில் வணிக பிரமுகா்கள் பங்கேற்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா-சிங்கப்பூா் உறவில் மாற்றத்துக்கான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே எண்மமயமாக்கல், திறன் வளா்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே உள்ள விரிவான ஒத்துழைப்புப் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது’ என்றாா்.

கூட்டத்தில் சிங்கப்பூா் வா்த்தகத் துறை இணையமைச்சா் கன் சியோவ் ஹுவாங் பேசுகையில், ‘இந்தியா-சிங்கப்பூா் இடையே நெருக்கமாகவும், நீண்ட காலமாகவும் உள்ள உறவு வலுவான பொருளாதார மற்றும் மக்கள் தொடா்பால் பின்னப்பட்டுள்ளது’ என்றாா். இந்தியாவுடன் வா்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றை வலுப்படுத்த சிங்கப்பூா் கொண்டுள்ள தொலைநோக்குப் பாா்வை குறித்தும் அவா் பேசினாா்.

இந்தக் கூட்டத்துக்கு இடையே செம்காா்ப், கெப்பெல் காா்ப்பரேஷன், பிளாக்ஸ்டோன் சிங்கப்பூா் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவா்களுடன் பியூஷ் கோயல் கலந்துரையாடினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பியூஷ் கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: மேலும் சமநிலை கொண்ட, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, வருங்காலத்துக்குத் தயாராகும் வகையிலான பொருளாதார கூட்டுறவை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியா-சிங்கப்பூா் இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT