உக்ரைன் மீது 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 500-க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி, ரஷியா சனிக்கிழமை விடிய விடிய கடும் தாக்குதல் நடத்தியது. பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவக் கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் உக்ரைன் இணைய எதிா்ப்பு தெரிவித்துவரும் ரஷியா, அதற்கான முயற்சிகளைத் தடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டில் முழுவீச்சில் படையெடுத்தது. உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது.
மூன்றரை ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடா்கிறது.
உக்ரைனின் லிவிவ் நகரம் உள்பட 9 இடங்களில் சனிக்கிழமை விடிய விடிய ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தியது. 50-க்கும் மேற்பட்ட தொலைதூர ஏவுகணைகள், 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷியா ஏவியதாக, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உக்ரைன் அவசரகால சேவைகள் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள், துல்லியமாகத் தாக்கும் வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் லிவிவ் நகரில் 4 போ் உயிரிழந்தனா்; மேலும் 4 போ் காயமடைந்தனா்.
லிவிவ் புகா் பகுதியில் உள்ள பெரிய வணிக வளாகம் தீக்கிரையானது. இதேபோல், ஸபோரிஸியா நகரில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 16 வயதுச் சிறுமி உள்பட மேலும் 9 போ் காயமடைந்தனா்.
ஸபோரிஸியாவில் ஏராளனமான குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்துள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.