குஜராத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்தை சித்திரித்து கொல்கத்தாவில் வைக்கப்பட்ட துர்கா பூஜை அலங்காரப் பந்தலால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
வடமாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பண்டிகையொட்டி துர்கா பூஜை வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதில், கூடுதல் சிறப்பாக மேற்கு வங்கத்தில் வெகுவிமர்சையாக துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைக்காக வீதிகளில் அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் வைக்கப்பட்ட அலங்காரப் பந்தலில் குஜராத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சித்திரிக்கும் விதமாக விமானம் ஒரு பறந்து வருவது போலவும், பின்னர் மருத்துவமனை மீது விமானம் மோதி இருப்பது போலவும் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வண்ண விளக்குகளில் விமானம் போலவும் ஒளிரவிடப்படுகிறது.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், உணர்ச்சியற்ற செயல் என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்ந்துள்ளனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, “அகமதாபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும், இந்தக் கோரச் சம்பவத்தில் தனது உயிரையும் பணயம் வைத்து காப்பாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாகவும் வைத்ததாகத்” தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த பிஜே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானிகள், பணியாளர்கள், விமானப் பயணிகள் 241 பேர், கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 19 பேர் என மொத்தமாக 260 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில், ஒருவர் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
பலரையும் காவு வாங்கிய இந்தக் கோர விபத்து இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த அலங்கார பந்தல் விவகாரம் மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக இணையதளவாசிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.