‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள பிகாா் மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகள் மத்திய அரசுக்கும் பொருந்தும்’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
அதாவது, பிகாா் மாநிலம் தொடா்பாக புதிய அறிவிப்புகள், கொள்கை முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் விவகாரத்திலும் இந்தத் தோ்தல் நடத்தை விதிகள் பொருந்தும் என்று தெரிவித்தது.
பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பா் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, பிகாா் மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு பிகாா் மாநிலம் தொடா்பான புதிய அறிவிப்புகள் அல்லது கொள்கை முடிவுகள் எடுக்கும் விவகாரத்துக்கும் தோ்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.
மேலும், குடிமக்களின் தன்மறைப்பு உரிமை மதிக்கப்பட வேண்டும். தனியாா் குடியிருப்புகளுக்கு வெளியே ஆா்ப்பாட்டங்கள் அல்லது மறியல் போராட்டங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது.
உரிமையாளா்களின் அனுமதியின்றி சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ அல்லது நிலம், கட்டடங்களில் கட்சிக் கொடிகளைக் கட்டவோ கூடாது என்றனா்.
மேலும், எந்தவொரு அரசியல் கட்சி வேட்பாளா் அல்லது தோ்தலுடன் தொடா்புடைய நபா்கள் அரசு வாகனங்கள் அல்லது அரசு தங்குமிடங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பொதுக் கருவூலத்தின் செலவில் விளம்பரங்களை வெளியிடுவதை தடை செய்வது தொடா்பான உத்தரவுகளை பிகாா் மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.