மேற்கு வங்க மாநிலம் மேற்கு வர்த்தமான் மாவட்டம் துர்காபூர் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான இரு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரின் விவரங்களை காவல் துறையினர் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
”இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கு முக்கியமான வழக்கு என்பதால், விவரங்களை பின்னர் வெளியிடுகிறோம்” என்று காவல் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியைப் பயன்படுத்தி, மற்றொருவரை சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளனர். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரின் கைப்பேசி எண்களையும் அடையாளம் காண முடிந்தது.
மருத்துவக் கல்லூரியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்லூரி ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவி தனது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.
துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், ஒடிஸா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியைச் சோ்ந்த மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த மாணவி தனது நண்பருடன் உணவு சாப்பிட சென்றுவிட்டு கல்லூரி வளாகத்துக்குத் திரும்பியுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத மூவர் வந்தபோது, அந்த மாணவியை அவரின் நண்பர் தனியே விட்டுச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவியிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு, அவரை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அந்த அடையாளம் தெரியாத நபர்கள் இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.