பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) இடையே 5 தொகுதிகளுக்கு போட்டி நிலவி வருகிறது.
இந்த 5 தொகுதிகளிலும் சிராக் பாஸ்வானின் சொந்த ஊரான ஆலெளலியும் அடங்கும். இந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க லோக் ஜனசக்தி காத்திருந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக ஆகிய கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய இரு சிறிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
நவம்பர் 6 மற்றும் 12 ஆகிய இரு தேதிகளில் பிகாருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை கட்சிகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நிதீஷ் குமார் முதல் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று (அக். 15) அறிவித்தார்.
லோக் ஜனசக்தி போட்டியிட விரும்பிய ஆலெளலி, சோன்பார்சா, ராஜ்கிர், ஏக்மா மற்றும் மோர்வா ஆகிய 5 தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. ஆலெளலி சிராக் பாஸ்வானின் சொந்த ஊர் என்பதால், அதில் போட்டியிட்டு வெற்றி பெறும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தற்போது அத்தொகுதியில் சிராக் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எஞ்சியுள்ள தொகுதிகளில் தங்களுக்கு சாதகமானவற்றை சிராக் பாஸ்வான் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிகார் தேர்தலுக்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்? - முதல்வர் சித்தராமையா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.