பாட்னா: பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் இருக்க மாட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமாரை அறிவிக்காமல், தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள்தான், அடுத்த முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று அமித் ஷா பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்றாலும்கூட, மீண்டும் நிதீஷ் குமார் முதல்வராவாரா என்பது தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, பிகார் தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் முதலில், அவர்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள், பிறகு, கட்சிப் பிரதிநிதிகள் ஒன்றாக அமர்ந்து, யார் தலைமையில் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மகாராஷ்டிரத்தில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்து முதல்வராக்கி, பிறகு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற போது, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அது போல பிகாரிலும் நடக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது அரசியல் நோக்கர்களுக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.