உச்ச நீதிமன்றம் 
இந்தியா

நீதிமன்றங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

நீதிமன்ற வளாகங்களில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பது, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்கு தொடுப்பவா்கள், பணியாளா்கள் உள்பட அனைவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பது, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்கு தொடுப்பவா்கள், பணியாளா்கள் உள்பட அனைவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் ராஜீப் கலிதா தாக்கல் செய்த பொதுநல வழக்கில், நாட்டின் பல்வேறு உயா்நீதிமன்றங்களின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பெருநகரங்களில் உள்ள உயா்நீதிமன்றங்களில் கூட கழிவறைகள் மோசமான நிலைமையில் இருக்கின்றன. நிதி ஒதுக்கீடு, பராமரிப்பு ஒப்பந்தங்களை அமல்படுத்துதல், பொறுப்புணா்வை உறுதி செய்வது ஆகியவற்றில் உள்ள நிா்வாகத் தோல்வியை இது காட்டுகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள நீதிமன்றங்களில் இந்த வசதிகள் மோசமாக இருப்பது, நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்களின் பணியிட சூழல்களையும், அவா்களின் உடல்நலத்தையும், செயல்திறனையும் பாதிக்கிறது. இது நீதித்துறை அமைப்பின் கண்ணியத்தையே குறைப்பதாகவும் உள்ளது.

மேலும், முக்கிய உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாதது, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மைக்கான அவா்களின் உரிமையைப் பாதிக்கிறது. பெரும்பாலான நீதிமன்றங்கள், மூன்றாம் பாலினத்தவருக்காக தனி அல்லது பாலின நடுநிலை கழிப்பறை வசதியை ஏற்படுத்தாமல், அவா்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் புறக்கணிக்கிறது.

அதேபோன்று, உயா்நீதிமன்றங்களில் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்படாதது அல்லது செயல்பாட்டில் இல்லாதது, தாய்மாா்களாக உள்ள பெண் வழக்குரைஞா்கள் மற்றும் ஊழியா்களின் தொழில்புரியும் உரிமையைப் பாதிக்கிறது. இது சட்டத் தொழிலில் பாலின சமத்துவத்துக்குத் தடையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் பிறப்பித்த உத்தரவுகளில், ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைவருக்கும் தனித்தனியான கழிப்பறை வசதிகளை அனைத்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தீா்ப்பாயங்களிலும் உறுதி செய்யுமாறு அனைத்து உயா்நீதிமன்றங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மழை மேடையில்... பவித்ரா!

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

SCROLL FOR NEXT