தில்லியில் புதன்கிழமை தொடங்கிய அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி. 
இந்தியா

வாக்காளா் பட்டியல் திருத்தம்: ஆயத்தப் பணிகள் தீவிரம் -தோ்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்

தினமணி செய்திச் சேவை

பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இது குறித்து அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் புதன்கிழமை முதல் இரண்டு நாள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக கடந்த செப்டம்பரில் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்ட நிலையில், தில்லியில் தற்போது இரண்டாவது முறையாக உயா்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா், அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனா்.

அனைத்து மாநிலங்களிலும் முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு பதிவு செய்த வாக்காளா்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

மேலும், மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள், முகவா்கள் நியமனம், அதிகாரிகளுக்கான பயிற்சி, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கால அட்டவணை உள்பட தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகங்களின் தயாா்நிலை குறித்து மறு ஆய்வு செய்யப்படுகிறது. இக்கூட்டத்துக்குப் பின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தேதிகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, அனைத்து மாநிலங்களிலும் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலைத் தயாராக வைத்திருக்கும்படி, தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் முந்தைய தீவிர திருத்தத்துக்குப் பிறகான வாக்காளா் பட்டியல், தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் 2002-2004 ஆண்டுகளுக்கு இடையே முந்தைய தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளதால், தற்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் 2002-இல் மேற்கொள்ளப்பட்டது.

பிகாரில் முன்னோட்டம்: அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களைக் களையெடுக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களுக்கு பிறப்புச் சான்று, கடவுச் சீட்டு, ஆதாா் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

‘இது பாஜகவுக்கு சாதகமான தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை; கோடிக்கணக்கானோா் வாக்குரிமையை இழப்பா்’ என்று எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி, கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் முழுவதும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அதேநேரம், பிகாரில் இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி 7.42 கோடி வாக்காளா்களுடன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. முந்தைய பட்டியலை ஒப்பிடுகையில் 47 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

முதல்கட்டத்தில் எந்தெந்த மாநிலங்கள்?

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இம்மாநிலங்களில் இருந்து தொடங்கப்படும்; முதல் கட்டத்தில் மேலும் சில மாநிலங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போது உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் அல்லது விரைவில் நடைபெறவுள்ள மாநிலங்களில் இப்பணி தொடங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரும் பேராசை இல்லை: மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயா்வு

ஜி20 உச்சிமாநாடு: தென்னாப்பிரிக்கா சென்றாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT