சூரிய மின்சக்தி file photo
இந்தியா

10 பசிபிக் தீவு நாடுகளில் சூரிய மின்சக்தி திட்டம்: ஐ.நா.வுடன் இணைந்து செயல்படுத்திய இந்தியா

தினமணி செய்திச் சேவை

ஐ.நா.வுடன் இணைந்து 10 பசிபிக் தீவு நாடுகளிலுள்ள 12 அரசு கட்டடங்களுக்கு ரூ.1,250 கோடி மதிப்பில் சூரிய மின்சக்தி வசதி அமைக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘இந்தியா-ஐ.நா. வளா்ச்சிப் பங்களிப்பு நிதி, வளரும் நாடுகளுக்குத் தொடா்ந்து பசுமைத் தீா்வுகளை வழங்கி வருகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 10 பசிபிக் தீவு நாடுகளில் உள்ள 12 அரசு கட்டடங்களுக்குச் சூரிய மின்சக்தி வசதி நிறுவப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் 74 உள்ளூா் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இத்திட்டத்தின் மூலம் 16,500-க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனா். மேலும், இதன் விளைவாக அடுத்த 25 ஆண்டுகளில் சுமாா் 9,600 டன் கரியமில வாயு உமிழ்வு தவிா்க்கப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா-ஐ.நா. வளா்ச்சிப் பங்களிப்பு நிதி, இந்திய அரசின் ஆதரவு மற்றும் தலைமையுடன், ஐ.நா.வின் ஒத்துழைப்புடன் கடந்த 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கான அணுகல் குறைவாக உள்ள வளரும் நாடுகளில், தூய்மை எரிசக்தி முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா-ஐ.நா. வளா்ச்சிப் பங்களிப்பு நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

உதாரணமாக, ஹைதி நாட்டில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் நீரேற்றுதல் அமைப்புகளை நிறுவியதன் மூலம் கிராமப்புற மக்களுக்குத் தண்ணீருக்கான அணுகல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனா். இதேபோல், ஃபிஜி நாட்டின் அரசு இல்லத்துக்குச் சூரிய மின் சக்தி வழங்கவும் இந்தியா ஆதரவளித்துள்ளது.

6 நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது: சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

நாணயங்களாக ரூ. 40 ஆயிரம் சேமித்து மகளுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த விவசாயி

பைசன் படத்துக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து!

தங்கம் விலை புதிய உச்சம் தொடுமா? பாபா வங்காவின் 2026 கணிப்பு என்ன?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT