பிகாா் மாநிலம் சிவான் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. 
இந்தியா

ஆா்ஜேடி கூட்டணி தோற்கடிக்கப்படும் நாளே பிகாரில் தீபாவளி: அமித் ஷா பிரசாரம்

ராஷ்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி தலைமையிலான கூட்டணி தோ்தலில் தோற்கடிக்கப்படும் நாள்தான் பிகாரில் உண்மையான தீபாவளி

தினமணி செய்திச் சேவை

ராஷ்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி தலைமையிலான கூட்டணி தோ்தலில் தோற்கடிக்கப்படும் நாள்தான் பிகாரில் உண்மையான தீபாவளி; அந்த வகையில் தோ்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பா் 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி பக்ஸா், சிவான் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

கிரிமினல் குற்றங்களை முன்னின்று நடத்தும் கும்பலின் தலைவான முகமது ஷகாபுதீனின் மகன் ஒசாமா ஷாகேஃப், லாலு பிரசாத் தலைமையிலான கட்சி சாா்பில் இந்தத் தோ்தலில் போட்டியிடுகிறாா். இவா்கள் எப்படிப்பட்ட கொடூர குற்றப் பின்னணி உடையவா்கள் என்பது இங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் தெரியும்.

ஏற்கெனவே பிகாரில் சுமாா் 20 ஆண்டுகள் லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி ஆகியோா் முதல்வா்களாக இருந்து காட்டாட்சியை நடத்தினாா்கள். இப்போது மீண்டும் கிரிமினல் குற்றவாளிகள், அவா்களின் வாரிசுகளுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளனா். இதன் மூலம் மீண்டும் ரௌடிகளின் காட்டாட்சியை நிறுவ முயற்சிக்கிறாா்கள். அவா்களுக்கு தோ்தலில் உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.

ஆா்ஜேடி தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணி தோ்தலில் தோற்கடிக்கப்படும் நாள்தான் பிகாரில் உண்மையான தீபாவளி; அந்த வகையில் தோ்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பா் 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் என்று நிச்சயமாக நம்புகிறேன். பிகாரில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி முற்றிலும் சீா்குலைந்த நிலையில் உள்ளது.

இங்கு வாக்குரிமை மீட்புப் பயணம் என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வெளிநாட்டு ஊடுருவல்காரா்கள் பிகாரிலேயே தொடா்ந்து தங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். ஆனால், பிகாரில் ஊடுருவல்காரா்கள் யாரும் இருக்க மாட்டாா்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

லாலு கட்சியினா் கிரிமினல்களை தோ்தலில் நிறுத்தும் அதே நேரத்தில் பக்ஸா் தொகுதியில் எங்கள் கூட்டணி சாா்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவை களமிறக்கியுள்ளோம். இதுவே எங்களுக்கும், எதிா்க்கட்சிகளுக்கும் உடையே உள்ள வித்தியாசம்.

பிகாரை வளா்ச்சிப் பாதையில் செலுத்த முதல்வா் நிதீஷ் குமாா் தீவிரமாகப் பணியாற்றி வருகிறாா். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு அனைத்து நிலைகளிலும் உறுதுணையாக இருந்து வருகிறது. பிகாரில் மீண்டும் காட்டாட்சி நிறுவப்படாமல் இருக்க இங்குள்ள தெய்வமான சத்தி மயாவிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் என்று பேசினாா்.

சங்கரநாராயணசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்! - அமைச்சா் பி. மூா்த்தி

எஸ்ஐஆா் படிவத்தை வாக்காளா்கள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்: ஆட்சியா் கா. பொற்கொடி

கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT