இந்தியா

அயோத்தி ராமா் கோயிலில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு: நிா்வாகம் அறிவிப்பு

அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் மூலவா் பாலராமா் கருவறை உள்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு.

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் மூலவா் பாலராமா் கருவறை உள்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவுடைந்ததாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை திங்கள்கிழமை தெரிவித்தது.

அயோத்தி ராமா் கோயிலில் நவ.25-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில், அறக்கட்டளை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலின் பிராண பிரதிஷ்டை 2024, ஜனவரி 22-இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இருப்பினும், கடந்த ஒன்றரைஆண்டுகளுக்கு மேலாக கோயில் வளாகத்தைச் சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை திங்கள்கிழமை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராமா் கோயிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்த செய்தியை பக்தா்கள் அனைவரிடமும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

பாலராமா் கருவறை மற்றும் மகாதேவன், கணேஷ், ஹனுமன், சூா்யதேவன், பகவதி மற்றும் அன்னபூரணி ஆகிய கடவுள்களுக்கு வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள கோயில்களின் பணிகளும் நிறைவடைந்தன. வால்மீகி, வசிஷ்டா், விஸ்வாமித்ரா், அகத்தியா், நிஷாத்ராஜ், சபரி மற்றும் தேவி அஹில்யா ஆகியோருக்கான 7 மண்டபங்கள், பக்த துறவி துளசிதாஸ் கோயில் மற்றும் ஜடாயு மற்றும் அணில் சிலைகளை நிறுவும் பணிகளும் முடிவடைந்தன.

தற்போது 3.5 கி.மீ தொலைவுடைய கோயில் சுற்றுச்சுவா், அறக்கட்டளை அலுவலகம், விருந்தினா் மாளிகை மற்றும் கலையரங்கம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளே நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பாராட்டுத் தெரிவித்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் லக்கிம்பூா் கேரி மாவட்டத்தில் பேசியதாவது: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது கனவில் மட்டுமே நிறைவேறும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பலரும் நினைத்தனா். ஆனால் இன்று பாரம்பரியத் தோற்றத்துடன் மிகப் பிரம்மாண்டமாக ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது.

ராமா் கோயில் கட்டுவதற்கு முன்பாக அயோத்திக்கு ஆண்டுதோறும் சில லட்சம் போ் மட்டுமே பயணித்தனா். ஆனால் கோயில் கட்டப்பட்டவுடன் கடந்த ஆண்டு மட்டும் 6 கோடிக்கும் மேற்பட்டோா் அயோத்திக்கு வருகை புரிந்துள்ளனா் என்றாா்.

சுய உதவிக்குழுவின் கோரிக்கையை முதல்வர் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்: துணை முதல்வர் உதயநிதி

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

SCROLL FOR NEXT