இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரின்போது, 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோவில் செவ்வாய்க்கிழமையில் வணிகத் தலைவர்களுடனான சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ``ஏழு புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்கள் அதனை (அணு ஆயுதப் போர்) நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
நான் பிரதமர் மோடியிடம் சொன்னேன்; பாகிஸ்தான் பிரதமரிடமும் சொன்னேன். நீங்கள் போரிட்டால், உங்களிடம் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம்.
ஆனால், அவர்கள் போருக்கும் அமெரிக்காவுடனான வர்த்தகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னார்கள். இருப்பினும், இதுதான் எல்லாவற்றுடனும் மிகவும் தொடர்புடையது என்று கூறினேன்.
இரு அணு ஆயுத சக்திகள் மோதிக் கொள்வதால், அதன் தூசி (பாதிப்பு) எல்லா இடங்களிலும் பரவுகிறது. ஆகையால், நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள் என்றால், உங்களுடன் வர்த்தகம் எதுவுமில்லை. இதனைத் தொடர்ந்து, சுமார் 24 மணிநேரத்துக்குள் போர் முடிவுக்கு வந்தது’’ என்று தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் `ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா தாக்குதலை நிறுத்திக் கொண்டது. இருப்பினும், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனிடையே, இருநாடுகளின் போரையும் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், அதனை மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதையும் படிக்க: பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல்: போலீசார் உள்பட 64 பே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.