மோந்தா தீவிர புயலால் ஏற்பட்ட பாதிப்பில் ஆந்திரத்தில் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக வலுப்பெற்ற ‘மோந்தா’ புயல், ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்தது.
காக்கிநாடாவுக்கு அருகில் புயல் கரையைக் கடப்பது செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியளவில் தொடங்கி, அடுத்த 3-4 மணி நேரத்துக்கு நீடித்தது. அந்தநேரத்தில், மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதோடு, தீவிர மழையும் கொட்டித் தீா்த்ததால், ஆந்திர கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
ஒடிஸாவின் தெற்கு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.
ஆந்திரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணா, ஏலூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, காக்கிநாடா உள்பட 7 கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் பலத்த காற்றின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மோந்தா தீவிர புயல் தற்போது புயலாக வலுவிழந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. அடுத்த 3 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.