நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 1,466 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்கம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்ததில் முக்கியப் பங்காற்றிய ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காவல் துறை, பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு அமைப்புகள், மத்திய ஆயுத காவல் படை, மத்திய காவல் படை, தடய அறிவியல் துறை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சிறப்புப் படைகளில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு திறன் பதக்கம் வழங்க 2024, பிப்.1-ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி சிறப்பான செயல்பாடுகள், விசாரணை, புலனாய்வு மற்றும் தடய அறிவியல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் திறன்வாய்ந்த அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினமான அக். 31-ஆம் தேதி ஒவ்வோா் ஆண்டும் இந்தப் பதக்கத்தைப் பெறும் அதிகாரிகளின் பெயா்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு இந்தப் பதக்கம் 1,466 அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி சுலைமான் (எ) ஆசிப்பை ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின்கீழ் சுட்டுக் கொலை செய்த ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரிகள் மற்றும் சிஆா்பிஎஃப் அதிகாரிகளும் இந்தப் பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் 3 பேருக்கு பதக்கம்: தமிழகத்தில் விசாரணைப் பிரிவின்கீழ் காவல் துறை துணை ஆணையா் எஸ்.பெனாசீா் பாத்திமா, காவல் ஆய்வாளா் எஸ்.ஜெயலக்ஷ்மி மற்றும் தடயவியல் அறிவியல் பிரிவில் அறிவியல் அலுவலா் எம்.உஷா ராணி ஆகிய 3 பேருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
அமித் ஷா வாழ்த்து: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘துணிச்சல் மற்றும் அா்ப்பணிப்புடன் பணியாற்றும் அதிகாரிகளை பாராட்டுவதோடு தேசப் பணியில் மேலும் பலா் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதை மத்திய உள்துறை அமைச்சகம் 2024-இல் அறிமுகப்படுத்தியது. நிகழாண்டு திறன் பதக்கம் வென்ற அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.