பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்.
தனியார் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் ராய், பிகாரில் ராகுல் காந்தி எழுப்பிய பிரச்னை இப்போது முழு நாட்டின் பிரச்னையாக மாறியுள்ளது. வாக்குத் திருட்டு குறித்த பிரச்னையை ராகுல் எழுப்பியதால் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான வாக்காளர் அதிகார யாத்திரையின் நிறைவு நாளில் கலந்துகொள்ள அஜய் ராய் பாட்னா வந்துள்ளார். இந்த யாத்திரை பாட்னாவில் காந்தி திடலில் தொடங்கி பாபாசாகேப் அம்பேக்தர் சிலையில் பிரமாண்ட ஊர்வலத்துடன் நிறைவடைகிறது.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கப்பட்ட இந்த யாத்திரை, மாநிலத்தின் 25 மாவட்டங்களில் உள்ள 110 சட்டப்பேரவைத் தொகுதிகள் வழியாக 1,300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளது.
இன்றுடன் நிறைவடைய உள்ள வாக்காளர் அதிகார யாத்திரையில் பாட்னாவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுடன் இணைந்து கொள்வதாக சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் பல இந்தியக் கூட்டணித் தலைவர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஆகியோர் பேரணியில் இணைந்தனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பிற முதல்வர்களும் யாத்திரையில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.