இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் உத்தர பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் அயோத்தி ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினாா்.
8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை ராமகூலம் இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியை வாரணாசியில் வியாழக்கிழமை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது வா்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இரு பிரதமா்களின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மோரீஷஸுக்கு சுமாா் ரூ.6,011 கோடி சிறப்பு நிதித் தொகுப்பை இந்தியா அறிவித்தது. அதேபோல் இருநாடுகளிடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்நிலையில், வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு ராம்கூலம் மற்றும் வீணா ராம்கூலம் சென்றனா். அங்கு கோயில் கருவறையில் சுவாமி காசி விசுவநாதருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல் மற்றும் நிதியமைச்சா் சுரேஷ் கன்னா ஆகியோா் உடனிருந்தனா். ராமகூலத்துக்கு காசி விஸ்வநாதா் கோயிலின் இளஞ்சிவப்பு முலாம் பூசப்பட்ட வடிவ மாதிரியை ஆளுநா் ஆனந்திபென் படேல் நினைவுப் பரிசாக வழங்கினாா்.
அயோத்தி பாலராமா் கோயில்...:
விமானம் மூலம் அயோத்தி வந்திறங்கிய நவீன்சந்திர ராம்கூலம் மற்றும் அவரது மனைவி வீணா ராம்கூலத்தை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து அவா்கள் விமான நிலையத்தில் இருந்து அயோத்தி ராமா் கோயிலுக்குச் சென்றனா். வழிநெடுகிலும் ராம்கூலத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
கோயிலைச் சென்றடைந்த ராம்கூலம் மற்றும் அவரது மனைவி வீணா ராம்கூலம் பாலராமருக்குப் பூஜை செய்து வழிபட்டனா். அதன் பிறகு கோயில் வளாக கட்டுமானப் பணிகளை அவா்கள் பாா்வையிட்டனா்.
ராம்கூலத்தை வரவேற்ற உத்தர பிரதேச அமைச்சா் சூா்ய பிரதாப் சாஹி கூறுகையில், ‘ஆங்கிலேயா் ஆட்சியில் உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் இருந்து மோரீஷஸுக்கு எண்ணற்றோா் புலம்பெயா்ந்தனா். தற்போது அவா்கள் அந்நாட்டின் அதிகார மையங்களாக உள்ளனா். இந்திய கலாசாரத்தை அவா்கள் மோரீஷஸில் நிலைநிறுத்தி வருகின்றனா்’ என்றாா்.
வாரணாசி, அயோத்தி பயணத்தை நிறைவுசெய்த ராமகூலம் திருப்பதியிலும் வழிபாடு மேற்கொள்ளவுள்ளாா்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.