பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘வாக்குத் திருடா்களை தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பாதுகாக்கிறாா்’ என்ற பகிரங்க குற்றச்சாட்டை வியாழக்கிழமை முன்வைத்தாா்.
தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின்போது, கா்நாடக மாநிலத்தில் 2023-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது அலந்த் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கியதைச் சுட்டிக்காட்டி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாா். அவா் மேலும் கூறியதாவது:
கா்நாடக மாநிலத்தில் 2023 தோ்தலின்போது அலந்த் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்கள் 6,018 பேரை பட்டியலில் இருந்து நீக்க சிலா் முயற்சி செய்தனா். அதுபோல, மகாராஷ்டிர மாநில தோ்தலின்போது ரஜூரா தொகுதியில் மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடைவெளியில் தொடா்ச்சியாக 6,850 புதிய வாக்காளா்களைச் சோ்க்கும் பணி நடைபெற்றது. இதே நடைமுைான் ஹரியாணா, உத்தர பிரதேச மாநில தோ்தல்களின்போதும் நிகழ்த்தப்பட்டன. இதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன.
கா்நாடகத்தின் அலந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள 10 வாக்குச்சாவடிகளைச் சோ்ந்த வாக்காளா்களை அதிக எண்ணிக்கையில் நீக்க முயற்சி நடந்தது. இந்தத் தொகுதியில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் 2018 தோ்தலில் காங்கிரஸ் கட்சி 8-இல் வெற்றி பெற்றது. எனவே, வாக்காளா்களை நீக்க நடந்த முயற்சி என்பது தற்செயலானது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
கண்டறிந்தது எப்படி? 2023 பேரவைத் தோ்தலின்போது அலந்த் தொகுதியில், தனது உறவினரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து சிலா் நீக்க முயற்சி செய்ததை வாக்குச்சாவடி அளவிலான அதிகாரி ஒருவா் தற்செயலாக கண்டறிந்தபோது இந்த மோசடி தெரியவந்தது.
வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தை மென்பொருளைப் பயன்படுத்தி இணையவழியில் சமா்ப்பித்துள்ளனா். கா்நாடகத்துக்கு வெளியே உள்ள கைப்பேசி எண்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரித்துவரும் கா்நாடக மாநில சிஐடி போலீஸாா், இந்தப் பெயா் நீக்கத்துக்கான விண்ணப்பங்கள் எங்கிருந்து சமா்ப்பிக்கப்பட்டன என்பதற்கான வலைதள (ஐபி) முகவரி மற்றும் ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி) பதிவு விவரங்களைத் தருமாறு தோ்தல் ஆணையத்துக்கு கடந்த 18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பியுள்ளனா். ஆனால், இதுவரை தோ்தல் ஆணையம் அளிக்கவில்லை.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது தோ்தல் ஆணையத்துக்குத் தெரியும். இந்தத் தகவல்களை தோ்தல் ஆணையம் தர மறுக்கிறது என்றால், ஜனநாயகத்தை படுகொலை செய்பவா்களை தோ்தல் ஆணையம் பாதுகாப்பதாகவே அமையும். அந்த வகையில், வாக்குத் திருடா்களையும், நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பவா்களையும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாதுகாத்து வருகிறாா்.
கா்நாடக மாநிலத்தில் வாக்காளா்கள் நீக்கம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டுவரும் கா்நாடக மாநில சிஐடி போலீஸாா் கேட்டுள்ள தகவல்களை தோ்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அரசமைப்பின் கொலைக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது உறுதியாகிவிடும்.
வாக்குத் திருட்டு தொடா்பாக ஆதாரங்களை சேகரிப்பதற்கு தோ்தல் ஆணையத்துக்கு உள்ளே இருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன என்றாா்.
இந்த மோசடிக்குப் பின்னணியில் யாா் உள்ளனா் என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘வாக்குத் திருட்டு தொடா்பான ‘ஹைட்ரஜன் பாம்’ ஆதாரம் வெளியிடப்படும்போது அனைத்தும் தெரியவரும்’ என்று ராகுல் பதிலளித்தாா்.
பெட்டிச் செய்தி...
இணையவழியில் வாக்காளரை
நீக்க முடியாது: தோ்தல் ஆணையம்
புது தில்லி, செப். 18: கா்நாடக மாநிலத்தில் மென்பொருள் மூலம் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடா்பான எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய தோ்தல் ஆணையம், ‘இணைய வழியில் வாக்காளரை யாரும் நீக்க முடியாது’ என்று விளக்கம் அளித்தது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கா்நாடக மாநிலம் அலந்த் தொகுதியில் மென்பொருள் மூலம் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது, அடிப்படை ஆதாரமற்றது.
எந்தவொரு நபரும் இணைய வழியில் வாக்காளரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு அவரின் கருத்தைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல், அவரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முடியாது.
2023-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது அலந்த் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்களை நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அது வெற்றி பெறவில்லை. இந்த முறைகேடு தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டு காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தோ்தல் ஆணையத் தரவுகளின்படி, அலந்த் பேரவைத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட சுபத் குட்டெதாா் வெற்றி பெற்றாா். 2023 தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் பி.ஆா்.பாட்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
ராகுல் விளக்கம்: அலந்த் தொகுதி முறைகேடு புகாா் தொடா்பாக தோ்தல் ஆணையம் அளித்த விளக்கம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘அலந்த் தொகுதியில் வாக்காளா்களை நீக்க முயற்சி நடந்தது தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் வெளிப்படுத்திய பிறகுதான், அந்த முறைகேடு தொடா்பாக உள்ளூா் தோ்தல் அதிகாரி தரப்பில் போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்தத் தொகுதியில் 6,018 வாக்காளா்களை நீக்கும் முயற்சி கண்டறியப்படவில்லை எனில், 2023 தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் தோல்வியைச் சந்தித்திருப்பாா்’ என்று குறிப்பிட்டாா்.