உலகம் முழுவதும் அமைதி மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்று மாதா அமிர்தானந்தமயி, தன்னுடைய பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா என அன்புடன் மக்களால் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயியின் 72-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அமிர்தபுரியில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் 'அமிர்தவர்ஷம் 72' என்ற பெயரில் சிறப்பாகக் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பிறந்த நாளையொட்டி மாதா அமர்தானந்தமயி, மக்களுக்காகவும் பக்தர்களுக்காகவும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
"மக்களின் இன்பங்கள், துன்பங்கள், புகார்கள் ஆகியவற்றை அம்மாவின் இந்தக் காதுகளில் கேட்கத் தொடங்கி அறுபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. மக்களின் இதயங்களின் வலியும் மக்களின் கண்ணீரின் மதிப்பும் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும்.
நமது கெட்ட பழக்கங்களை முற்றிலுமாக கைவிட முடியாவிட்டாலும், அவற்றை மாற்ற முயற்சிக்க வேண்டும். நமது மன வளர்ச்சிக்கும் சமூகத்தின் நன்மைக்கும் உதவும் புதிய பழக்கங்கள் நம்முள் பிறக்க வேண்டும். அதுதான் சரியான பிறந்த நாள். இந்த வழியில், நன்மையின் பல புதிய பிறப்புகள் தொடர்ந்து நிகழும்.
அத்தகைய நன்மையின் மரங்கள் உள்ளத்தில் நடப்பட வேண்டும். அது பூக்கும்போது, அதன் நிறமும் மணமும் எங்கும் பரவும். அது நமக்கும் மற்றவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைப் பரப்பும். அதுதான் உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டம். இது எளிதான காரியம் அல்ல என்பது அம்மாவிற்குத் தெரியும். இருப்பினும், எங்கும் இருள் பரவி வரும் இவ்வேளையில், எதிர்காலத்தைக் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், நாம் அனைவரும் நன்மையின் சிறிய சிறிய மரங்களாக மாற வேண்டும். இல்லாவிடில் இவ்வுலகம் மாறாது.
படைப்பில் காணப்படும் அனைத்தும் அற்புதமானவை. எனினும் மிகப் பெரிய அதிசயம் மனிதன்தான். ஏனென்றால் மனிதனுக்கு ஒரு தனித்துவமான குணம் உண்டு. அது சிந்திக்கும் திறன் மற்றும் சரி எது, தவறு எது என்பதைப் பகுத்தறிந்து அதற்கேற்ப செயல்படும் திறன். அதை நாம் புரிந்துகொள்ளும்போது, உள்ளே ஒரு புதிய சூரிய உதயம் ஏற்படும். நம் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பின்னர் உலகம் தானாகவே மாறும்.
உலகில் எந்தத் தீமையும் இல்லை. மோசமான கண்ணோட்டத்தால் மனிதன் ஏற்படுத்தும் தீங்குகள் மட்டுமே உள்ளன. மனிதன் தனது திறனைத் தவறாக சிந்திக்கவும் செயல்படவும் பயன்படுத்துகிறான்.
இயற்கையில் இரண்டு விதமான சட்டங்கள் உள்ளன. ஒன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள், மற்றொன்று பிரபஞ்சத்தின் விதி. மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு ஒரு அமைப்பு உள்ளது. அதேபோல், பிரபஞ்சத்திற்கும் ஒரு தாளமும் அமைப்பும் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றலாம். ஆனால் பிரபஞ்சத்தின் நுட்பமான விதிகளை யாராலும் மாற்ற முடியாது.
கடவுளின் சட்டத்தை யாராலும் மீற முடியாது. அப்படி மீறினால் மனிதனின் சட்டங்கள் தகர்ந்துவிடும். ஒரு மனிதன், 'நான் புவி ஈர்ப்பு விசையை நம்பவில்லை' என்று கூறி, ஒரு கட்டடத்தின் பத்தாவது மாடியிலிருந்து குதித்தால், அவனால் புவி ஈர்ப்பு விசையை மீற முடியுமா? முடியாது. அதற்கு பதிலாக, அவன் தன் கை, கால்களை உடைத்துக் கொள்வான்.
மனிதர்களாலும் அரசுகளாலும் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்களுக்குள் மட்டுமே நாம் இப்போது செயல்படுகிறோம். அது நிச்சயமாக அவசியம். ஆனால் பெரும்பாலும் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் நிர்வகிக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்திக்கு முரணான விஷயங்களையும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். உலக வாழ்வில் சட்டங்களும் வேறுபாடுகளும் அவசியம். ஆனால், "இந்த பூமியும் இயற்கையும் நமக்கு மட்டுமே சொந்தமானது. நாம் விரும்பியதைச் செய்வோம், நம் விருப்பப்படி வாழ்வோம்" என்கிற மனப்பான்மை தவறானது.
ஒருபுறம், போர், சமத்துவமின்மை மற்றும் அநீதிக்கு எதிராக உலகம் முழுவதும் மாநாடுகள் மற்றும் விவாதங்களை நடத்துகிறோம். சுற்றுச்சுழல் பாதுகாப்பு, கூட்டு நடவடிக்கை, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றின் தேவைகளைப் பற்றி நாம் பேசுகிறோம்; உடன்பாடு மற்றும் ஒப்பந்தங்களை வரையறை செய்கிறோம். ஆனால் மறுபுறம், 'இனியும் முற்றிலுமாக நிறுத்திவிடப் போகிறேன்' என்று அறிவிக்கப்பட்ட செயல்கள் கூட நிறுத்தப்படாமல் தொடர்கின்றன.
நாம் கேரளத்தைக் 'கடவுளின் சொந்த நாடு', 'கல்வியறிவு பெற்ற கேரளம்', 'பண்பாட்டு கேரளம்' என்று பாடி புகழ்ந்து விளம்பரங்களில் எழுதி உலகிற்கு அறிவிக்கிறோம். ஆனால் ' நீண்ட நாள்களுக்கு முன்னரே கடவுள்' இந்த நாட்டை விட்டுவெளியேறிவிட்டார் போல் தெரிகிறது. ஏனென்றால் தர்ம உணர்வு தொலைந்து போய்விட்டது.
இரவு ஆனாலும் சரி பகலானாலும் சரி பெண்களாலும் சிறுமிகளாலும் இன்று, பயமின்றி தனியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்மா எப்போதும் பிரார்த்தனை செய்வதுண்டு, "கடவுளே, இன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் கொடுமை பற்றிய எந்த செய்தியையும் நான் கேட்ககூடாதே..." என்று. ஆனால் அது இன்றுவரை ஒரு கனவாகவே உள்ளது. இதற்கெல்லாம் நாம் கடவுளைக் குறை கூற முடியாது.
கடவுள் எல்லாவற்றையும் நூறு சதவீதம் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. சரியாகச் சொன்னால், மக்கள் தனது வாழ்க்கையில் கடவுளுக்கு போதிய இடத்தைக் கொடுப்பதில்லை. “தன்னுடைய பொழுதுபோக்கிற்கு நேரம் போக எஞ்சிய நேரம் கடவுளுக்கு" என்பதே பலரின் மனப்பான்மை. கடவுளை விட்டுவிடுவோம் எல்லாம் மனித முயற்சியால்தான் நடக்கிறது என்பதாகவே இருக்கட்டும்., நாம் செய்ய வேண்டியதை, சரியான நேரத்தில், நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்கிறோமா?
மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். பிறகு, கடவுள் என்ன செய்ய வேண்டுமோ அது இயல்பாகவே நடக்கும். நம் பையில் ஒரு விதையை வைத்துக்கொண்டு, அது முளைக்கும் என்று எதிர்பார்த்தால், அது நடக்காது. நாம் அதை பூமியில் விதைக்க வேண்டும்.
தனிமனிதனையும் சமூகத்தையும் மேம்படுத்துவதில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. இன்று, கல்வித் துறையில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சமூகத்தில் மதிப்புகள் அழிந்து வருகின்றன. மேலும் விவாகரத்து, மனச்சோர்வு, தற்கொலை, கொலை மற்றும் போதைப்பொருள் பழக்கம் அனைத்தும் அதிகரித்து வருகின்றன.
கல்வி, ஐந்து குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும்
1. வாழ்வாதாரம் - செல்வம், பதவி மற்றும் வாழ்க்கையின் தேவைகள், வசதிகளைப் பெறுவதற்கு அறிவையும் பயிற்சியையும் வழங்க வேண்டும்.
2. குணநலன் உருவாக்கம் - உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல குணநலன்களை வளர்ப்பதற்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். கல்வி ஆரோக்கியமான மனம், உணர்ச்சி முதிர்ச்சி மற்றும் பாகுபாட்டை வளர்க்க உதவ வேண்டும்.
3. அன்பும் நன்றியுணர்வும் - கல்வி மாணவர்களுக்கு இயற்கையையும் கடவுளையும் நேசிக்கவும், மதிக்கவும், நன்றியுணர்வுடன் இருக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
4. சமூகத்திற்கும் உலகத்திற்கும் கடமை - மாணவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களைப் பராமரிப்பதற்கு மட்டுமல்லாமல், சமூகம், தேசம், உலகம் மற்றும் இயற்கைக்கான தங்கள் பொறுப்பை, கடமையை நிறைவேற்றவும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இயற்கை நமக்கு உணவு, தங்குமிடம், சூரிய ஒளி, மழை, மலைகள், காடுகள், ஆறுகள், மரங்கள், பூக்கள் மற்றும் பழங்களை வழங்குகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வி, ஒருவரின் திறனுக்கு ஏற்ப சமூக சேவை மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்வதற்கான உந்துதலை ஏற்படுத்த வேண்டும்.
5. சுய விழிப்புணர்வு - கல்வி நமது உண்மையான சாராம்சத்தைப் பற்றிய விழிப்புணர்வை எழுப்ப வேண்டும்: நாம் தனியான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அல்ல, மாறாக பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணரவேண்டும். கடலின் நடுவில் உள்ள நீரும் கரையில் உள்ள அலைகளும் அடிப்படையில் ஒன்றே என்பது போல, பிரபஞ்சம் என்ற பெருங்கடலில் உள்ள எண்ணற்ற அலைகளில் நானும் ஒரு அலை என்ற அறிவை அது விதைக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும் சிந்தனை சக்தியை வளர்க்கவும் விசாரணையை எழுப்பவும் குணத்தை செம்மைப்படுத்தவும் சக மனிதர்களிடம் இரக்கத்தை வளர்க்கவும் கல்வி வலிமை அளிக்க வேண்டும்.
இன்று நாம் அடிக்கடி "மதிப்பு அடிப்படையிலான கல்வி" பற்றிப் பேசுகிறோம். உண்மையில், கல்வியும் மதிப்புகளும் இரண்டு தனித்தனி விஷயங்கள் அல்ல. அவை ஒன்றுதான் - எள்ளில் உள்ள எண்ணெயைப் போல, நமக்கு வாழ்க்கை நடத்துவதற்கு கல்வி மட்டுமல்ல, வாழ்க்கைக்கான கல்வியும் தேவை. இரண்டு வகையான கல்விகள் உள்ளன - ஒன்று வாழ்வதற்கான கல்வி, மற்றொன்று வாழ்க்கைக் கல்வி. மாணவர்கள் மருத்துவர், பொறியாளர் அல்லது வேறு ஏதேனும் ஒரு தொழிலை மேற்கொள்ள படிக்கும்போது, அது வாழ்வாதாரத்திற்காக - சம்பாதிப்பதற்காக கற்பதாகும். இரண்டாவது வகை கல்வியானது வாழ்க்கைக்கானது. இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்தக் கல்விதான் உலகின் தன்மை மற்றும் அதன் பொருள்கள் பற்றிய முழுமையான புரிதலை நமக்குத் தருகிறது. நமது உணர்ச்சிகளை அடையாளம் காணவும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் இது நமக்குக் கற்பிக்கிறது. விஷயங்களை அவற்றின் இடத்தில் பார்த்து அதற்கேற்ப நடந்து கொள்ள இது நமக்கு உதவுகிறது.
நம் மனப்பான்மையை மாற்றினால், நம் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்ள முடியும். எல்லா ஆடம்பரங்களும் நிறைந்த தங்கமாளிகையில் வாழ்பவருக்குக் கூட, தூங்குவதற்கு தூக்க மாத்திரைகள் தேவைப்படலாம். இவ்வளவு ஆடம்பரத்தில் வாழ்ந்தாலும், பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, அமைதியும் மகிழ்ச்சியும் வெளிப்புற பொருள்களிலிருந்து வருவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது - அவை உண்மையில் மனதிலிருந்து வருகின்றன. "ஏர் கண்டிஷனிங்" தேவைப்படுவது நம் மனதிற்குதான் . நம் மனநிலையை சரிசெய்வதன் மூலம், நம் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இதற்கு, நற்பண்புகள் தேவை.
ஆன்மீக தத்துவங்கள் என்பது ஒரு ஜிபிஎஸ்-ஐப் பயன்படுத்துவது போன்றது. உதாரணமாக, நாம் நமது நண்பரின் வீட்டிற்கு காரில் செல்ல விரும்புகிறோம், ஆனால் வழி தெரியவில்லை. நமது ஜிபிஎஸ்-ஐப் பயன்படுத்தினால், நாம் நமது இலக்கை அடைவோம் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஜிபிஎஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், வழியில் அந்நியர்களிடம் வழி கேட்க வேண்டியிருக்கும், மேலும் நாம் வழிதவறிச் செல்ல நேரிடலாம். பயணத்தின் போது நாம் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அதேபோல், ஆன்மிக அறிவு என்ற ஜிபிஎஸ், வாழ்க்கையின் கணிக்க முடியாத சாலைகளில் தொலைந்து போகாமல் அமைதியாக பயணிக்க உதவுகிறது.
ஆங்கிலத்தில், 'கல்ச்சர்' என்ற வார்த்தை கலாசாரம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகத்தில், கல்ச்சர் என்பது அது வளர ஏற்ற சூழலுடன் வழங்கப்பட்ட பாக்டீரியாக்களின் மாதிரியாகும். இந்த சூழலில் "கல்ச்சர்" என்றால் என்ன? இது மாதிரியில் உள்ள பாக்டீரியாக்கள் செழித்து வளர சாதகமான நிலைமைகளை உருவாக்குவதைக் குறிக்கிறது. அதேபோல், சம்ஸ்காரம் - ஆன்மிக கலாசாரம் - நமக்கு உள் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை வழங்குகிறது. குழந்தைகளில் இந்த வளர்ச்சி ஏற்பட, முதலில் வீடுகளிலும், பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்.
இப்போதெல்லாம், நாம் நமது தேவைகளை விட நமது ஆசைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆசைகளும் தேவைகளும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, 100 டாலர் விலையுள்ள கடிகாரமும் 10,000 டாலர் விலையுள்ள கடிகாரமும் சரியான நேரத்தைக் காட்டும். நமக்குத் தேவையானது அவ்வளவுதான். அம்மா, விலை உயர்ந்த கடிகாரங்களை மக்கள் அணியக்கூடாது என்று கூறவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஆசைகளுக்கு முடிவே இல்லை. நம்மிடம் இருப்பதில் திருப்தி அடையவும் மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியைக் காணவும் நாம் முயற்சிக்க வேண்டும். இதுவே வாழ்க்கையில் நாம் அடையக்கூடிய மிகப்பெரிய செல்வம்.
பொறுமை போன்ற நற்பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும், ஏனெனில் பொறுமையே அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளம்.
சாலைப் பயணங்களில், "கவனம்! சாலை வேலை நடைபெறுகிறது! உங்கள் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி" என்று எழுதப்பட்ட பலகைகளை நாம் பார்த்திருக்கலாம். இதுபோன்ற பலகைகளைக் காணும்போது, நாம் எவ்வளவு அவசரமாக சென்றுகொண்டிருந்தாலும், உடனடியாக வேகத்தைக் குறைத்து, மிகவும் கவனமாக ஓட்டுகிறோம். அதேபோல், நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் நம்மிடம் எரிச்சலூட்டும் விஷயங்களைச் சொல்லலாம், ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு பொறுமை தேவை. நமக்குத் தெரிந்தவரை, அவர்களின் மனதிலும் சில சாலை வேலைகள் நடந்து கொண்டிருக்கலாம். ஒரு ஊனமுற்ற நபரிடம் நாம் பொறுமையாக இருப்பதுபோல, கோபம் உள்ளவர்களும் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் என்பதையும், அவர்களைப் பொறுமையாகக் கையாள வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் மற்றவர்களை நம்பி ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் அல்ல. நாம் சுயமாக பிரகாசிக்கும் சூரியன். நாம் உதவியற்ற பூனைக்குட்டிகள் அல்ல; நாம் அனைவரும் சக்திவாய்ந்த சிங்கங்கள். நமது உள் திறனை எழுப்ப பொறுமையையும் விடாமுயற்சியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனிதன் பறவையைப் போல பறக்கவும் மீனைப் போல நீந்தவும் கற்றுக்கொண்டான், ஆனால் மனிதனைப் போல நடக்கவும் வாழவும் மறந்துவிட்டான். மண்புழு கூட பிறக்கிறது, இனப்பெருக்கம் செய்கிறது, இறக்கிறது. இந்த உயர்ந்த மனிதப் பிறவி நமக்கு இருந்தாலும், புழுக்களிலிருந்து நாம் என்ன வித்தியாசம் செய்கிறோம்? குறைந்தபட்சம் மண்புழு இறக்கும் போது மண்ணை உரமாக்குகிறது. மறுபுறம், மனிதர்கள் இறக்கும் போது கூட, அடக்கத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களால் பூமியை மாசுபடுத்துகிறார்கள் அல்லது தங்கள் உடல்களை எரிப்பதில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும்போது, பூமியைச் சுரண்டி அழிக்கிறார்கள். ஒரு ஆமை எங்கு ஊர்ந்து சென்றாலும், அது மணலில் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது. அதேபோல், நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கு முன் நல்ல நினைவுகளின் அடையாளத்தை விட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும்.
சமூகத்தில் மோதல்களும் அமைதியின்மையும் அதிகரித்து வருகின்றன. அது ஒவ்வொரு வீட்டிலும் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளைப் போன்றது, அது எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடும். நாம் எப்போதும் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துகிறோம். ஆனால் நம் இதயங்கள் சந்திக்கின்றனவா? நம்முடைய உண்மையான ஆன்மாவை சந்திக்கிறோமா ?
விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவுகள் அன்பில் வேரூன்றவில்லை. வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் சுயநலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர் பேசுவதைக் கேட்பதில்லை. அவர்கள் தங்கள் சொந்த கருத்துகளின்படி நடக்கிறார்கள். உண்மையான உறவு இல்லையென்றால் குடும்ப உறவுகள் எவ்வாறு தொடரும்?
இந்த மனித வாழ்க்கை அன்பில் பிறப்பதற்கும், அன்புடன் வாழ்வதற்கும், இறுதியில் அன்பில் முடிவடைவதற்கும் நோக்கமாக உள்ளது. உண்மையில், தூய அன்பிற்கு முடிவே இல்லை. படைப்பில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் அன்பு இணைக்கிறது. மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தையை அதன் தாயுடனும் ஒரு தாயை அதன் குழந்தையுடனும் பிணைப்பது அன்பின் சக்தி.
முழு நிலவு உதிக்கும்போது, பூமி இரவின் இருளிலிருந்து விடுபடுகிறது. அதேபோல், அன்பு மற்றும் தன்னலமற்ற தன்மையின் ஒளி உலகை சூழ்ந்துள்ள சுயநலம், வெறுப்பு மற்றும் மோதல்களின் இருளை அகற்றட்டும். நன்மையின் அழகான புதிய விடியல் மலரட்டும். உண்மை மற்றும் தர்மத்தின் ஒளி மனிதகுலத்தின் இதயங்களை நிரப்பட்டும். அம்மா இந்த பிரார்த்தனையை பரமனிடம் சமர்ப்பிக்கிறேன். உலகம் முழுவதும் அமைதி மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும்.
நாம் சிரித்தாலும் அழுதாலும் காலம் கடந்து போகும். எனவே, நம் வாழ்க்கையை சிரிப்பால் நிரப்ப வேண்டும். மற்ற எந்த முடிவையும் போலவே, மகிழ்ச்சியாக இருப்பது என்பது ஒரு முடிவு. அது உறுதியான முடிவு, "எதுவும் என் வழியில் வரட்டும், நான் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் தைரியமாக இருப்பேன். நான் தனியாக இல்லை; கடவுள் என்னுடன் இருக்கிறார்." இந்த தன்னம்பிக்கை, நம் மனதில் நினைக்கும் எதையும் செய்ய நமக்கு சக்தியை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் மாதா அமிர்தானந்தமயி.
இதையும் படிக்க... அம்மாவும் அவர் தொண்டும் - மனிதத்தின் மீதான எல்லையற்ற அன்பு, உலகளாவிய ஓர் ஆன்மிக ஒளி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.